

வெளிநாடுகளில் இருந்தவர்கள் விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டபோது, எத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறை இப்போதும் பின்பற்றப்பட வேண்டும். இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கட்டணமின்றி அழைத்துச் சென்று விட்டு, அதற்கான கட்டணத்தை மத்திய அரசிடம் ரயில்வே துறை வசூலித்துக் கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்ப ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணிக்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நள்ளிரவில் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் இப்போது வரையிலான 40 நாட்களாக அவர்கள் வேலையில்லாமல் வாடுகின்றனர். தங்குவதற்கு இடமும், உண்ண உணவும் இல்லாமல் தவித்த அவர்கள், ஏதாவது ஒரு வழியில் சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்றனர்.
ஆனால், அவர்களால் நோய் பரவி விடக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதாலும், பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும்தான் அவர்கள் வாழும் பகுதிகளில் மாநில அரசு ஏற்படுத்தித் தந்த முகாம்களில் 40 நாட்களாகத் தங்கியிருந்தனர்.
உழைத்து சேமித்த பணம் முழுவதையும் செலவழித்துவிட்டு, அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் தவிக்கும் அவர்களிடம் கட்டணம் செலுத்தும்படி ரயில்வே நிர்வாகம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய் பரவத் தொடங்கியபோது சீனா, ஐரோப்பிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தவித்த இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அதற்காக ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து மார்ச் 22 ஆம் தேதி வரை ஏராளமான சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அந்த விமானங்கள் இந்தியாவிலிருந்து காலியாகச் சென்று பயணிகளை ஏற்றி வந்தன.
வணிக நோக்கத்தில் பார்த்தால் அதற்காக இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒருவரிடமிருந்து கூட, ஒரு ரூபாய் கூட கட்டணமாக வசூலிக்கப்படவில்லை. மாறாக, அந்தத் தொகையை ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசே செலுத்திவிட்டது.
விமானத்தில் பயணம் செய்தவர்களுடன் ஒப்பிடும்போது, ரயில்களில் இப்போது பயணிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமானது. அவர்கள் சொந்த ஊர்களில் வாழ வழியில்லாமல்தான் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஊர்களுக்குச் சென்று பணியாற்றுகின்றனர்.
அவ்வாறு பணியாற்றும் போதும் கூட கடுமையான உழைப்புச் சுரண்டல்களுக்கு ஆளாகின்றனர். ஆனாலும் சொந்த ஊர்களில் இருந்தால் அதற்குக் கூட வழியில்லை என்பதால்தான் உழைப்புச் சுரண்டல்களைப் பொறுத்துக்கொண்டு பணியாற்றி வருகின்றனர்.
இப்போதும் கூட நோய் பயம் காரணமாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்ற அச்சம் காரணமாகவும்தான் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். நிலைமை சீரடைந்து அவர்கள் பணிக்குத் திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை ரயில்வே கைவிட வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்தவர்கள் விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டபோது, எத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறை இப்போதும் பின்பற்றப்பட வேண்டும். இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கட்டணமின்றி அழைத்துச் சென்று விட்டு, அதற்கான கட்டணத்தை மத்திய அரசிடம் ரயில்வே துறை வசூலித்துக் கொள்ள வேண்டும்.
ரயில்வே துறை அறப்பணிகளுக்காக செலவிடும் தொகையுடன் ஒப்பிடும்போது இதற்கான செலவு மிகவும் குறைவாகும். அதேபோல், கரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்காக மத்திய அரசு இதுவரை ரூ.3 லட்சம் கோடிக்கும் கூடுதலாக செலவழித்துள்ள நிலையில் இந்தச் செலவு ஒரு சுமையல்ல.
எனவே, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்களில் இலவசமாக சொந்த ஊர் செல்லலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசும், ரயில்வே துறையும் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.