Published : 04 May 2020 02:53 PM
Last Updated : 04 May 2020 02:53 PM

கால்நடைகளுக்குத் தக்காளி: கடும் விலை சரிவால் பயிரிட்ட தொகை கூடக் கிடைக்காத விரக்தியில் விவசாயிகள்

ஓசூர் பகுதியில் தக்காளி உற்பத்தி அதிகரித்த நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அவற்றை விற்பனைக்கு அனுப்பி வைக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதால் மொத்த விலையில் ரூ.1க்கும் சில்லறை விலையில் ரூ.5க்கும் தக்காளி விலை சரிவடைந்துள்ளது. இதனால் பயிரிட்ட செலவு கூடக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கால்நடைகளுக்குத் தக்காளியை உணவாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக தக்காளி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிபிளவர், பீட்ரூட் உள்ளிட்ட தோட்டப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளையும் தரமான மற்றும் சுவைமிகுந்த காய்கறிகள் சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினமும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறி உற்பத்தி அதிகரித்தும், விற்பனையில் சரிவும் ஏற்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கான வெளியூர்ச் சந்தை முற்றிலுமாகக் குறைந்துள்ளதே காரணமாகும். குறிப்பாக தக்காளி விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பொதுவாக ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட்டு மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.10 என்ற விலையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை லாபம் ஈட்டி வந்த விவசாயிகளுக்கு தற்போது தக்காளியின் விலை, மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.1 முதல் ரூ.2 வரை விலை சரிவடைந்துள்ளதால், உரச் செலவு, பறிப்புக் கூலி உள்ளிட்ட பயிரிட்ட செலவு கூடக் கிடைக்காமல் தோட்டத்தில் நன்கு விளைந்துள்ள தக்காளிகளைக் கால்நடைகளுக்கு உணவாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கெலமங்கலம் ஒன்றியம், ஜக்கேரி ஊராட்சி, மல்லேபள்ளம் கிராமத்தில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயி சிவப்பா கூறியதாவது:

''இங்கு 3 ஏக்கரில் தக்காளி பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டத்தில் தக்காளிச் செடிகள் நாற்று நடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களில் பலன் கொடுக்க ஆரம்பித்து தொடர்ந்து அடுத்த 3 மாதங்கள் வரை பலன் கொடுத்து வரும். ஒரு ஏக்கரில் 40 டன் முதல் 50 டன் வரை தக்காளி அறுவடை செய்யலாம். இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்குக்கு முன்பு வரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையாகி வந்தது.

வெளியூர்களுக்கும் தக்காளிகளை அனுப்பி வந்தோம். ஊரடங்கு அறிவித்த பிறகு தக்காளி தேக்கமடைந்து விலை குறைந்துவிட்டது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளியை ரூ.1 க்கு கூட வாங்க ஆளில்லை. இதனால் நன்கு விளைந்துள்ள தக்காளியை அறுவடை செய்ய முடியாமல் செடியிலேயே விட்டு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை குறைந்துள்ளதால் தக்காளியை வாங்க வியாபாரிகளும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இப்பகுதியில் தக்காளி பயிரிட செலவு செய்த விவசாயிகளுக்கு வாங்கிய கடனைக் கூட கொடுக்கமுடியாமல் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய முடியாத தக்காளியை அறுவடை செய்தாலும் கூலி கொடுக்க வழியின்றி தக்காளி தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகிறோம். ஆகவே தக்காளி பயிரிட்டு பெரும் இழப்பைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்''.

இவ்வாறு விவசாயி சிவப்பா கூறினார்.

இதுகுறித்து சூளகிரி உதவி வேளாண் அலுவலர் தமிழ்வேந்தன் கூறுகையில், ''நடப்பாண்டில் சூளகிரி, ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி விளைச்சல் இருமடங்காக உயர்ந்துள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க முடியாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் விலை சரிவடைந்துள்ளது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x