

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 2 பெண்களுக்கு இன்று காலை கரோனா தொற்று உறுதியானது.
இவர்கள் இருவரும் நேற்று வரை அங்கு செயல்பட்டு வரும் தனியார் எண்ணெய் ஆலையில் பணி செய்துவந்ததால் ஊழியர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கெனவே 32 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் இன்று புதிதாக இரண்டு பெண்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று ஏற்பட்ட இரு பெண்களும் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வசித்த பகுதியில் கிருமிநாசினி தெளித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இரண்டு பெண்களும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அங்கிருந்து இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.