மே 18 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு: பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஏற்பாடு

மே 18 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு: பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஏற்பாடு

Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களிலும் பொதுமுடக்கம் முடிவுக்கு வரும் வரை அனைவருக்கும் கட்டணமின்றி உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் நாடெங்கும் அமலில் இருக்கும் பொதுமுடக்கத்தை அடுத்து, வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களின் பசி தீர்க்கும் கேந்திரங்களில் ஒன்றாக அம்மா உணவகங்களும் இருக்கின்றன.

பொதுமுடக்கம் அமலுக்கு வந்த நாளில் இருந்தே அம்மா உணவகங்களை நாடிவரும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதையடுத்து பல ஊர்களிலும் அம்மா உணவகத்தில் மே 3-ம் தேதி வரை மூன்று வேளையும் உணவளிக்க ஆகும் மொத்தச் செலவையும் அந்தந்தப் பகுதி அதிமுகவினரே ஏற்றுக் கொண்டனர். அதற்கான பணத்தை அவர்கள் மொத்தமாகச் செலுத்திவிட்டதால் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மே 3-க்குப் பிறகும் பொதுமுடக்கம் தொடர்வதால் இன்றிலிருந்து அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களிலும் பொதுமுடக்கம் முடிவுக்கு வரும் மே 18-ம் தேதி வரை மக்களுக்குக் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என்று மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, “இரண்டு உணவகங்களிலும் மக்களுக்கு இலவச உணவளிக்க ஆகும் செலவை பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஏற்கும்” என்று அறிவித்துள்ள ராமச்சந்திரன், “அதற்கான தொகை முழுவதும் இன்று அதற்கான அதிகாரிகளிடம் வழங்கப்படும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in