சுழற்சி அடிப்படையில் ரேஷன் பொருட்கள் கிடைக்குமா?- திருப்பூரில் புலம்பெயர்ந்து வாழும் வடமாநிலத் தொழிலாளர்கள் தவிப்பு

சுழற்சி அடிப்படையில் ரேஷன் பொருட்கள் கிடைக்குமா?- திருப்பூரில் புலம்பெயர்ந்து வாழும் வடமாநிலத் தொழிலாளர்கள் தவிப்பு
Updated on
2 min read

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பலருக்கும் ஒரே நாளில் வேலை அளிக்கும் உழைப்பாளர் நகரம் திருப்பூர். பின்னலாடைத் தொழிலை நம்பி நாள்தோறும் வடமாநிலத் தொழிலாளர்கள் ரயிலில் படையெடுத்து வருகிறார்கள். தேய்ந்த செருப்பு. வறண்ட கண்கள். ஒட்டிய கன்னங்கள். தலைச்சுமையாக சிற்சில பண்ட பாத்திரங்கள். முதுகில் துணிப்பை. முந்தானையை குழந்தைக்கு குடையாக்கி நெடுந்தூரம் நடக்கும் தாய்மார்கள் இவையெல்லாம் திருப்பூர் ரயில்நிலையத்தின் அன்றாடக் காட்சிகள். இவர்களை நிறுவனங்களில் உடனடியாக பணிக்கு சேர்த்துவிடுகிறார்கள் தரகர்கள்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் நீட்டிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கால், நிறுவனங்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் வடமாநிலத் தொழிலாளர்கள். வருவாய்த்துறை மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் மூலம் திருப்பூரில் வாழும் வடமாநிலத் தொழிலாளர்களை, கடந்த சில வாரங்களுக்குள் கணக்கெடுத்து முடித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

வடமாநிலத் தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கட்டுப் பாட்டு அறையில், 5 மொழி பேசக்கூடியவர்கள் 24 மணிநேரமும் இருக்கிறார்கள்.

இதுவரை உணவு உட்பட பல்வேறு தேவைகளுக்காக 2700 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன. ஊரடங்கு தொடங்கியது முதல், அங்கு வரும் அழைப்புகளை வைத்து நேரில் சென்று அவர்களை கணக்கெடுத்தோம். படிப்படியாக வருவாய் அலுவலர் சுகுமார், துணை ஆட்சியர் ஜெகநாதன் ஆகியோர் மேற்பார்வையில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கரோனா ஃபைட்டர்ஸ் எனப்படும் தன்னார்வலர்கள் உதவியோடு வடமாநிலத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பை முடித்தோம்.

திருப்பூரில் தற்போதைய கணக்கெடுப்பின்படி, 1லட்சத்து 30000-ம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 42000-ம் பேர், பிஹார் மாநிலத்தை சேர்ந்த 38000-ம் பேர், மேற்கு வங்க மாநிலம் 13000-ம் பேர், உத்தரபிரதேசம் 9000-ம் பேர், ஜார்க்கண்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் என மொத்தமாக 1லட்சத்து 30000-ம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். கணக்கெடுப்பில், ஆதார் எண், அலைபேசி எண் மற்றும் சொந்த மாநிலத்தின் முகவரியை சேகரித்துள்ளோம். திருப்பூரில் வாழும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மூன்று முறை ரேஷன் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்டவைகளை சுழற்சி அடிப்படையில் வழங்கி உள்ளோம், என்றார்.

மேற்கு வங்கத்தினரை விசாரிக்க வேண்டும்

சிஐடியு பனியன் சங்க செயலாளர் ஜி.சம்பத்: திருப்பூரில் சுமார் 2 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். 2010-க்கு பிறகு இவர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. 1979-ம் ஆண்டு தமிழக அரசின் புலம்பெயர் தொழிலாளர் சட்டப்படி, தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த நடைமுறை இங்கு இல்லை. மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வருபவர்களை நன்கு விசாரிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பலரும் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு. போலி முகவரி தயாரித்து இங்கு வருகிறார்கள். தற்போதைய சூழலில் பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் ரத்தாகிவிட்டன. மீண்டும் இயல்புநிலை திரும்ப 3 மாதங்கள் ஆகும்.

ஆகவே ஊரடங்கு முடிவுக்கு வரும்போது, வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில் வசதி செய்து தருவது தான், அவர்களுக்கான தற்போதைய தேவையாக இருக்கும் என்றார். கரோனா வைரஸ் தொற்று காலம் முடிந்து, பனியன் நிறுவனங்களில் வேலை இயல்பு நிலைக்கும் திரும்பும் வரை, சுழற்சி அடிப்படையில் ரேஷன் பொருட்களை அனைவருக்கும் தொடர் விநியோகம் செய்து, அவர்களின் பசிப்பிணியை போக்க வேண்டும் என்பதே வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட அனைவரின் எதிர்பார்ப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in