

சீனாவுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் இந்தியாவுக்கும் கிடைக்கும் என்று தொழில் துறையினர் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். திருப்பூர் தொழில் துறையினரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் கே.பழனிசாமி, பனியன் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளார். ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களை ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப 50 சதவீதம் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இதுதொடர்பாக ஏற்றுமதி யாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், சங்க உறுப்பினர்களுடன் ஆன்லைன் மூலம் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், தொழில் துறையினருக்கு சிரமமின்றியும், தொழிலாளர்களை பாதுகாப்பாக பணியமர்த்தவும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, நிறுவனங்களை இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தொழில் துறையினரின் தேவைகள் குறித்தும், ஆட்சியர் அனுமதி வழங்கியவுடன் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள மன மாற்றத்தால், சீனாவுக்கான தொழில் வாய்ப்புகள், எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய பாதுகாப்புடன் தொழில்கள் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.