ஊரடங்கு நேரத்திலும் பெட்ரோல், டீசல் மதிப்புக் கூட்டு வரி உயர்வா?- ஸ்டாலின், தினகரன், முத்தரசன் கண்டனம்

ஊரடங்கு நேரத்திலும் பெட்ரோல், டீசல் மதிப்புக் கூட்டு வரி உயர்வா?- ஸ்டாலின், தினகரன், முத்தரசன் கண்டனம்
Updated on
2 min read

கரோனா பாதிப்பால் நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிப்பது போல தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியை(VAT) திடீரென அதிகப்படுத்தி பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என ஸ்டாலின், தினகரன், முத்தரசன் ஆகிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு இன்று பெட்ரோல்,டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் விலைவாசி மேலும் உயர வாய்ப்புள்ளது. கரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றும் செயல் எனத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு:

''ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியிருப்பது சரியா? முறையா? நியாயமா?.

இதனால் தமிழக அரசின் மதிப்புதான் குறையும்; விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும். எனவே வரி உயர்வைத் திரும்பப் பெற்று, மக்களுக்கு உதவியாக இருக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரனின் ட்விட்டர் பதிவு:

“கரோனா பாதிப்பால் நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிப்பது போல தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியைத்(VAT) திடீரென அதிகப்படுத்தி பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்த போதும் இந்தியாவில் விலை குறைப்பினை மத்திய அரசு செய்யாத நிலையில், அதற்கு நேர்மாறாக இங்குள்ள ஆட்சியாளர்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதைத் துளியும் ஏற்கமுடியாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்திருக்கும் சூழலில்,பழனிசாமி அரசின் இந்நடவடிக்கை ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களை மேலும் வாட்டி வதைக்கவே வழி வகுக்கும். எனவே, பெட்ரோல் - டீசலுக்கான வரியை அதிகப்படுத்தும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.:

“பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. கோவிட்-19 நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது வரியை உயர்த்தி இருப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைக் அடைந்து கிடக்கும் நிலையில் மத்திய அரசு கலால் வரி உயர்த்தி ஏறத்தாழ ரூபாய் 50.ஆயிரம் கோடி சுமையை எரிபொருள் நுகர்வோர் தலையில் சுமத்தியது.

இதனைத் தொடர்ந்து கோவிட்-19 நோய் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக நாடு முடக்கம் செய்து, வேலை இழந்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில், எப்போது வேலை தேடி வெளியே செல்ல முடியும் என ஒவ்வொரு நாளும் ஏங்கி நிற்கும் நிலையில், தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி இருப்பது ‘கழுத்தை முறிக்கும் சுமை தாங்கி நிற்பவன் தலையில் மேலும் பெரும் பாரத்தை ஏற்றும்’ இரக்கமற்ற செயலாகும்.

இதனால் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, உடனடியாக உயர்த்தப்பட்ட மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்ய வேண்டும்” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in