Published : 03 May 2020 09:45 PM
Last Updated : 03 May 2020 09:45 PM

118 அரசு மருத்துவர்களின் தண்டனை பணியிட மாற்றத்தை ரத்து செய்க: முதல்வருக்கு அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடிதம்

போராட்டம் நடத்திய மருத்துவர்கள் | கோப்புப் படம்.

சென்னை

உடனடியாக 118 அரசு மருத்துவர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்து மீள் பணியமர்த்தவும், 17B குற்றக் குறிப்பாணைகளை முதல்வர் ரத்து செய்திட வேண்டும் என்று அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''தற்பொழுது தமிழகத்தில் சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக விளங்கும் கரோனா நோய்த்தொற்று தடுப்புக்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முழு மனதுடன் வரவேற்கிறது.

உலகையே அச்சுறுத்தும் கொடிய கோவிட்-19 நோய்த்தொற்றை வேரோடு அழிப்பதற்கு தமிழக அரசுடன் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் அரசு மருத்துவர்கள் இணைந்து செயல்படுவோம் என உறுதியளித்தோம். அதன்படி ஒவ்வொரு அரசு மருத்துவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த கண் துஞ்சாமல் உழைத்துவருகின்றனர். இந்த நிலையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுகின்ற அரசு மருத்துவர்களுக்கு எப்போதும் பாதுகாவலனாக அரசு திகழும் என்று நீங்கள் உறுதியளித்தது வரவேற்கத்தக்க ஒன்று.

அரசு மருத்துவர்களுக்கு நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றினாலே போதும் என்ற எங்கள் கோரிக்கையை கடந்த மாதம் முதலமைச்சருக்கு வேண்டுகோளாக வைத்தோம். சமீபத்தில் 6 மாத காலத்திற்கு முன் ( 6 மாதம் நிறைவடைந்தது) நியாயமான கோரிக்கைகளுக்கு (காலமுறை ஊதியம் மற்றும் பதவி உயர்வு, 50%இடஒதுக்கீடு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடம் , முறையான, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான கவுன்சிலிங்) போராடிய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் , உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், பெண் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட 118 அரசுமருத்துவர்கள் தண்டனை பணிமாற்றத்தால் தொலை தூரங்களில் அவதியுற்று வருகின்றனர். மேலும் குடும்பங்களை, குழந்தைகளைப் பிரிந்து கடும் மனஉளைச்சலில் பணிசெய்துவருகின்றனர்.

கரோனா தொற்று அச்சுறுத்தும் வேளையில் பணியிடங்களுக்குச் சென்று வருவதில் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். மேலும் உயிர்காக்க வேண்டிய அரசு மருத்துவர்கள் தொலைதூரப் பயணங்களால் தங்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளனர் . எனவே 118 அரசு மருத்துவர்களின் நலன் கருதி தண்டனை பணியிடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து அவரவர் சொந்த இடங்களில் மீள்பணியமர்த்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டோம். அப்பொழுதுதான் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களும், ஏனைய அரசு மருத்துவர்களும் அரசின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் பணியாற்றுவார்கள் என்பதைத் தெரிவித்துகொண்டோம்.

ஆனால், போராட்டத்தின் காரணமாக பணியிடமாற்றம் பெற்றும் போராடியவர்களை மீட்க முயற்சி செய்து மன உளைச்சலில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்ததையும் மேலும் பணியிடமாறுதல் பெற்ற பல பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் தற்பொழுது கரோனா தொற்று காலத்தில் குடும்பங்களைப் பிரிந்து இரட்டிப்பு மன உளைச்சலில் உள்ளதையும் நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள் என்று நம்புகிறோம்.

கரோனா தொற்று ஆரம்பித்த சமயத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுதலை செய்த நல் உள்ளங்கொண்ட நீங்கள், 28/02/2020 அன்று நீதியரசர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களை மீள்பணியமர்த்தவும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள 17B குற்றக் குறிப்பாணைகளை ரத்து செய்யுமாறு தனது தீர்ப்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோளாக தெரிவித்திருந்தீர்கள். இன்று தனியார் மருத்துவமனைகள் முடங்கிக்கிடக்கும் வேலையிலும், பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும் கரோனா தடுப்பில் உயிர்காக்கும் அரசு மருத்துவர்களின் உடல்நலனை, மனநலனைக் கருத்தில் கொண்டு, தாயுள்ளத்துடன் இனியும் தாமதிக்காமல் உடனடியாக 118 அரசு மருத்துவர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்து மீள் பணியமர்த்தவும் ,17B குற்றக் குறிப்பாணைகளை ரத்து செய்திட வேண்டும்''.

இவ்வாறு அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x