Published : 03 May 2020 08:09 PM
Last Updated : 03 May 2020 08:09 PM

தமிழகத்தில் இன்று 266 பேருக்கு கரோனா; சென்னையில் 203 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆனது

தமிழகத்தில் 266 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 203 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், வியாபாரிகள், சென்று வந்த பொதுமக்கள் ஆகியோருக்கு தொற்று அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 266 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 3,023ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 90 சதவீதத்துக்கும் மேல் அதாவது 203 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 1,255 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 1458 ஆக அதிகரித்துள்ளது. முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தனி மனித இடைவெளி , முகக்கவசம் அணியாமல் இருப்பது என இருப்பதால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் தமிழக அமைச்சரவை கூடி தமிழகத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து விரிவான அறிவிப்பை வெளியிட்டது. அதில் சென்னைக்கு மட்டும் தனியாக அறிவிப்பை வெளியிட்டது.

ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்த முடியும், எதையும் அரசே முடிவெடுத்து அறிவிக்கும், நீண்ட காலமாக இந்த வைரஸ் நம்முடன் இருக்கும் என்பதால் நமது வாழ்க்கை முறையையும் நாம் மாற்றி அமைத்தாக வேண்டும் என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

கரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. இன்று கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 266 ஆகும். அதைச் சேர்த்து 3023 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 203 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மீதியுள்ள 11 மாவட்டங்களில் 63 பேருக்கு தொற்று உள்ளது. 25 மாவட்டங்களில் தொற்று இன்று இல்லை.

* தற்போது 35 அரசு ஆய்வகங்கள், 14 தனியார் ஆய்வகங்கள் என 49 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 1,611 பேர்.

* தற்போது தனிமையில் இருப்பவர்கள் 37 ஆயிரத்து 206 பேர்.

* அரசின் கண்காணிப்பில் இருப்பவர்கள் 40 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,50,107.

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 1,40,716.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 10,584.

* மொத்தம் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 3,023.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 266.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 187 பேர். பெண்கள் 79 பேர்.

* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 38 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,379 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 203 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 1,255 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 1458ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை, இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அதே எண்ணிக்கையில் 4 அதிகரித்து 146 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் அதே எண்ணிக்கையில் 114 ஆக உள்ளது. திண்டுக்கல் 81, ஈரோடு 70 என்கிற அதே எண்ணிக்கையுடன் உள்ளது. புதிதாக சென்னையில் 203, கோவை 4, திருவள்ளூரில் 2, அரியலூர் 2, கள்ளக்குறிச்சி 6, விழுப்புரம் 33, கடலூர் 9, திருவண்ணாமலை 1, மதுரை 2, , செங்கல்பட்டில் 1, தென்காசி, கன்னியாகுமரி 1, என மொத்தம் 12 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 170 பேர். இதில் ஆண் குழந்தைகள் 88 பேர். பெண் குழந்தைகள் 82 பேர்.

13 முதல் 60 வயது உள்ளவர்கள் 2,564 பேர். இதில் ஆண்கள் 1732 பேர். பெண்கள் 831பேர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 289 பேர். இதில் ஆண்கள் 195 பேர். பெண்கள் 94 பேர்.

15க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுள்ள, நான்கு நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 12.

15 நபர்களுக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை கொண்ட ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 24.

கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x