Last Updated : 03 May, 2020 05:37 PM

 

Published : 03 May 2020 05:37 PM
Last Updated : 03 May 2020 05:37 PM

பிற மாவட்ட, மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வருவோரை கண்டறிய 110 தன்னார்வலர்கள்: நெல்லை மாநகராட்சி ஏற்பாடு

திருநெல்வேலி

திருநெல்வேலிக்கு அனுமதியின்றி பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் நபர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தவும் வார்டுக்கு 2 தன்னார்வலர்கள் வீதம் 55 வார்டுகளுக்கும் 110 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வாடிக்கையாளர்கள் முகக்கவசத்துடன் பொருட்கள் வாங்க வருகின்றார்களா என்பதை கவனித்து, முகக்கவசம் இன்றி பொருட்கள் வாங்க வரும் பட்சத்தில் கடையிலேயே முகக்கவசங்கள் வைத்திருந்து அவர்களுக்கு வழங்கி, அதற்கான பில்தொகையை, பொருட்கள் பில்லுடன் சேர்த்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் நபர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கை உட்படுத்தவும், வார்டுக்கு இரண்டு தன்னார்வலர்கள் வீதம் 55 வார்டுகளுக்கும் 110 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் பற்றியும், பிற புகார்களுக்கும் மாநகராட்சி இலவச தொலைபேசி எண் 1800 425 4656-க்கு பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

கண்காணிப்பு கோபுரம் அமைப்பு:

திருநெல்வேலி மாநகருக்குள் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் வருவோரை கண்டுபிடிக்க ஏதுவாக கண்காணிப்பு கோபுரத்தை போலீஸார் அமைத்துள்ளனர்.

திருநெல்வேலி பேட்டையில் மாநகர எல்லையில் இந்த கண்காணிப்பு கோபுரத்தை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் காவல்துறை துணை ஆணையர் கூறும்போது,

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வருகிறார்கள். அவ்வாறு வருவதை கண்காணித்து தடுக்கவும், வாகனங்களில் வருவோரை தனிமைப்படுத்தவும் போலீஸார் 24 மணிநேர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக இந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x