

குமரியில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல 900 வெளிமாநிலத் தொழிலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான கணக்கெடுப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை, செங்கல்சூளை, மற்றும் சுற்றுலா மையங்களில் டெல்லி, ராஜஸ்தான், அசாம், மத்திய பிரதேசம், அரியானா, குஜராத், பீகார் உட்பட வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர்.
தற்போது கரோனா பாதிப்பால் அமலில் உள்ள ஊரடங்கால் வேலையின்றியும், அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமலும் வெளிமாநில தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் வெளிமாநிலத்திற்கு தொழிலாளர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான கணக்கெடுபபு பணி கடந்த மூன்று நாட்களாக குமரியில் நடந்து வருகிறது.
காவல் நிலையம் வாரியாக வெளிமாநில தொலாளர்களை போலீஸார் சந்தித்து வெளிமாநிலம் செல்ல விரும்பம் உள்ளவர்கள் குறித்த பட்டியலை தயாரித்து கணக்கெடுத்து வருகின்றனர்.
இவற்றில் 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்தனர். இவர்கள் காவல் நிலையங்களில் நேரில் சென்று தங்களது விவரங்களை பதிவு செய்தனர்.
இந்தத் தொழிலாளர்களை இரு நாட்களில் வெளிமாநிலத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.