

கரோனாவால் வெறிச்சோடிய சுற்றுலா நகரமான புதுச்சேரியில் தற்போது வேலைவாய்ப்பின்மை சதவீதம் கடுமையாக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி என்றாலே நீண்ட வரிசையில் அழகான தெருக்களும், பூங்காக்களும், கோயில்களும் மனம் கவரும். குடும்பத்தினர் மட்டுமில்லாமல் இளையோரும் அதிகளவில் புதுச்சேரி வருவார்கள்.கோடை விடுமுறை நாட்களில் மட்டுமல்லாது வார விடுமுறை நாட்களிலும் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அல்லாடுவர் பலர்.
இவை அனைத்தையும் கரோனா புரட்டி போட்டு விட்டது. வழக்கமாக மக்கள் நெரிசல் அதிகமுள்ள கடற்கரைசாலை, பூங்காக்கள், மணக்குள விநாயகர் கோயில், படகு இல்லம், உணவகங்கள் எல்லாம் யாருமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.
சுற்றுலாத்துறை தரப்பில் விசாரித்தபோது, "கடந்த 2019-ம் ஆண்டில் புதுச்சேரிக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2019-ல் 26 சதவீதம் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது, ஆனால் நடப்பாண்டில் கரோனாவால் ஊரடங்கால் தலைகீழாகியுள்ளது" என்றனர்.
தங்கும் விடுதி உரிமையாளர்கள் தரப்பில் கேட்டதற்கு, "தற்போது கோடைகாலம் என்பதால் புதுச்சேரி சுற்றுலாவுக்கு இந்த ஏப்ரல், மே மாதங்கள் பொற்காலம்.விடுதிகளில் அறைகள் பிப்ரவரி மாதமே முன்பதிவாகிவிடும். ஆனால், கரோனாவால் புதுச்சேரி சுற்றுலாத்துறை அடியோடு முடங்கிப்போய் உள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு மற்ற தொழில் துறைகளாவது ஓரளவு மீண்டு வழக்கம்போல் செயல்படத் தொடங்கும். ஆனால், சுற்றுலாத்துறை தொடர்ந்து முடங்கும் அபாயம் இருக்கிறது. புத்தாண்டு, கடந்த கோடைக்காலங்களில் விடுதி அறைகள் கிடைக்காமல் கடலூரில் அறை எடுத்து தங்கி புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வந்ததை தற்போது நினைத்து பார்க்கிறோம்" என்கின்றனர்.
உணவக சங்கத்தின் துணைத்தலைவர் கிருஷ்ண பிரதாப் கூறுகையில், சுற்றுலா பயணிகளை நம்பிதான் பெரிய உணவகங்கள் தொடங்கி ஆட்டோ ஓட்டுநர்கள், பெட்டிக்கடைகள், விடுதிகள் என ஏராளமானோர் இயங்கி வருகின்றனர். ஊடரங்கு பிறகு பலரும் செலவை கட்டுப்படுத்த சுற்றுலா சார்ந்த விஷயங்களை குறைக்க வாய்ப்புள்ளதால் நாங்கள் ஊரடங்கு பிறகும் அபாய கட்டத்தில் உள்ளோம் என்கிறார்.
வெளிநாட்டவர்கள் புதுச்சேரி வந்தால் நகரை ரிக்சாவில் சுற்றி பார்ப்பது வழக்கம். ஆனால், ரிக்சா ஓட்டுநர்கள் நிலை
கரோனாவினால் உணவில்லா நிலைக்கு தள்ளியுள்ளது. ரிக்சா ஓட்டுநர் ராஜாவிடம் கேட்டதற்கு, "பிரெஞ்சு காலத்தில் ஆயிரக்கணக்கில் ரிக்சா தொழிலாளர்கள் இருந்தோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆட்டோ, கார் வாகனங்கள் வளர்ச்சி அதிகரித்ததால் தற்போது நூற்றுக்கும் குறைவான ரிக்சா ஓட்டுநர்கள் மட்டும் உள்ளோம். பணியிருந்தால் மட்டுமே எங்களால் உணவு சாப்பிட முடியும் ஒரு மாதமாக முழுமையாக முடங்கி போய்விட்டோம். எங்களுக்கு தானமாக கிடைக்கும் உணவைதான் நாங்களும் வீட்டில் உள்ளோரும் சாப்பிடும் சூழல் இருக்கிறது என்றனர்.
வழக்கறிஞர் சரவணன் தற்போதைய பொருளாதார சூழல் தொடர்பாக கூறுகையில், கரோனா வைரஸ் காரணமாக ஆறு வார ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2020 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 23.8 சதவீதத்தை எட்டியுள்ளது, இது முந்தைய மார்ச் மாதத்தில் 8.7 சதவீதத்தை விட அதிகமாக இருந்தது என்று திங்க்-டேங்க் சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்திய பொருளாதாரம் ( CMIE) என்ற ஆய்வு நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.மாநில வாரியாக வேலையின்மை விகிதம் பரவலாக வேறுபட்டுகிறது.
அதில் புதுச்சேரியில் அதிக அளவிலான வேலையின்மை விகிதம் 75.8% ஆகவும், தமிழ்நாட்டில் 49.8% ஆகவும் உள்ளது. வேலையில்லாத தொழிலாளர்கள் தற்போது விரக்தியில் தள்ளியுள்ளதாக ஆய்வறிக்கையில் உள்ளது" என்று குறிப்பிடுகிறார்.
அதை நேரத்தில் கரோனாவுக்கு பிறகு மக்கள் மனநிலையை சீராக்க நிச்சயம் சுற்றுலா நகரங்களுக்கு வருவார்கள். இதிலிருந்து நாங்கள் மீளுவோம் என்ற நம்பிக்கையுள்ளது" என்ற நம்பிக்கையிலும் ஏராளமான சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபடும் ஊழியர்கள் நம்புகின்றனர். நம்பிக்கைதானே வாழ்க்கை.