Published : 03 May 2020 04:26 PM
Last Updated : 03 May 2020 04:26 PM

ஊரடங்கு நீட்டிப்பால் கரோனா போகும், பசி போகுமா?- அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5000 நிவாரணம் வழங்குங்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஊரடங்கை நீட்டித்தால் கரோனா போய்விடும், பசி போகுமா? அனைத்து குடும்பங்களுக்கும், (ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும்) 5000 ரூபாய் பண உதவியும், அத்தியாவசிய மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்குவதும் அடுத்த மூன்று மாத காலத்துக்கு அவசியம், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசு மீண்டும் ஊரடங்கினை மே 17 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடந்த 5 வாரங்களாக வேலையும் வருமானமும் இன்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் எளிய உழைப்பாளி மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்திற்கான எந்த நிவாரண உதவிகளையும் அறிவிக்காமல் விட்டது மத்திய அரசின் பொறுப்பற்ற செயலாகும்.

இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூடி, மே 17 வரை ஊரடங்கை நீட்டிப்பது என்றும், சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது எனவும் முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையிலும் சாதாரண உழைப்பாளி, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், ஆட்டோ - வாடகைக் கார் ஓட்டுநர்கள், சிறு குறு தொழில் முனைவோர், மாற்றுத் திறனாளிகள் என எப்பகுதியினருக்கும் எவ்வித நிவாரணத்தையும் அறிவிக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.

கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறோம்:

1) வெளி மாநிலங்களிலுள்ள தமிழகத் தொழிலாளிகளை அழைத்து வருவது மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்புவது குறித்து அரசு முறையான நடவடிக்கைகள் எடுக்காதது மிகுந்த கவலையளிக்கிறது. துரிதமான தலையீடுகளை உடன் திட்டமிட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கான பயணச் செலவுகளை மத்திய அரசும், மாநிலத்திற்குள் ஏற்படும் பயணச் செலவுகளை மாநில அரசும் ஏற்க வேண்டும்.

2) ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொதுப் போக்குவரத்துக்கு தடை நீடிப்பதன் மூலம் சாதாரண மக்கள் மற்றும் அன்றாட உழைப்பாளிகள் தங்கள் பணிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பற்ற நிலையே ஏற்படும். எனவே, தனிநபர் விலகலோடு கூடிய குறைந்தபட்ச போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திட வேண்டும்

3) சிறு குறு நடுத்தர தொழில்களின் நிலைமை சீர்குலைந்துள்ளது. அவர்களுக்கென்று சிறப்பு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து தேவைப்படுகிறது. உதாரணமாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்காக மத்திய அரசு அவர்களுக்கு மானியம் அளிப்பதும், குறைந்த வட்டியில் சுலபமான கடன் கிடைக்க ஏற்பாடு செய்வதும், ஆறு மாத காலம் கடன் தவணைகள் கேட்கப்படாது (moratorium) என்கிற வாக்குறுதியும் மத்திய அரசு செய்திட, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். அவர்களது மின்கட்டணத்தை ஆறுமாத காலத்திற்கு மாநில அரசு வற்புறுத்தக்கூடாது.

4) அனைத்து குடும்பங்களுக்கும், (ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும்) 5000 ரூபாய் பண உதவியும், அத்தியாவசிய மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்குவதும் அடுத்த மூன்று மாத காலத்துக்கு அவசியம். மத்திய அரசின் உணவு கிடங்குகளில் உள்ள அரிசி மற்றும் தானியங்களை மாநிலங்களுக்கு விலையின்றி கொடுக்க வேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டும்.

5) சிறு குறு விவசாயிகளுக்கு விவசாய பணிகளை துவக்குவதற்கு 10,000 ரூபாய் உதவித் தொகை அளிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். கொரோனாவால் சாகுபடி மற்றும் அறுவடையில் ஏற்பட்ட இழப்புக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு அறிவிக்க வேண்டும். அதைப்போன்று ஏற்கனவே இருக்கக்கூடிய விவசாய கடனை ரத்து செய்து முழு அளவில் பணிகள் நடப்பதற்கு புதிய கடன்களை வழங்க வேண்டும்.

6) 100 நாள் வேலையை உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் துவங்க வேண்டும். ஏற்கனவே இருந்த வேலையில்லா காலத்திற்கான நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.

7) எக்காரணம் கொண்டும் ஆட்குறைப்பு, கதவடைப்பு, வேலையிழப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

8) E-pass பெறுவதற்கு இணையதளம் மூலமாக மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பது சாதாரண மக்களுக்கு பெரும் பிரச்சனையாக மாறும். பிரவுசிங் மையத்தில் கூட்டம் கூடுவதும், அதற்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதுமே நடக்கும். அதைப்போன்று ஒரே மாவட்டத்துக்குள் பயணிப்பதற்கு கூட விண்ணப்பங்கள் மாநில அளவில் மையப்படுத்தி பெறப்படுவது தேவையற்ற தாமதத்தை உருவாக்கும்.

மருத்துவம், இறப்பு போன்ற அவசர கால சூழலில் இத்தகைய தாமதம் உயிரிழப்பை உருவாக்கும். மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக விண்ணப்பம் பெற்று அனுமதி அளிப்பது என்பது இதனை ஓரளவு தீர்த்து வைக்க உதவும். எனவே, இதை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும்.

9) கரோனா தொற்று சம்பந்தமான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அரசு மருத்துவ கட்டமைப்பு மட்டும் போதாது. தனியார் மருத்துவ கட்டமைப்பை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்துவதற்கான உத்தரவை மத்திய, மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டும். அதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை மத்திய அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

10) டாஸ்மாக் கடைகளை தற்போது திறப்பதில்லை என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அது நீடிக்க வேண்டும். இத்தகைய அறிவிப்புகள் இல்லையெனில் பசி, பட்டினியைத் தவிர்த்திட ஊரடங்கை மீறுவதும், அதனால் தொற்று தொடர்ந்து பரவுவதற்குமே இட்டுச் செல்லும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்கும் நிலையே உருவாகும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்”.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x