

பஜ்ஜி, போண்டாவுக்காக இல்லை, கட்டுப்பாடு காரணங்களைக் காட்டி ஏழை மக்களுக்கான உதவிகள் தடுக்கப்பட்டு வந்தது உள்ளிட்ட காரணங்களாலேயே போராட்டம் நடத்தினோம் என திருப்பூர் பெரியதோட்டம் பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் பெரியதோட்டம் பகுதியில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால், அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அங்கு தற்போது ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 1-ம் தேதி மாலை அப்பகுதியில் பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்கள் விற்பனை செய்த கடை ஒன்றின் முன் மக்கள் சிலர் கூட்டமாக நிற்பதை பார்த்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு காவல் நிலைய போலீஸார், அனுமதி இல்லாமல் கடை திறந்த உரிமையாளரை காவல் துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது பொதுமக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, வாக்குவாதம் ஏற்பட்டது.
சாலையில் அமர்ந்து போராட்டம்:
தொடர்ந்து காவல் துறையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் உதவி ஆணையர் நவீன்குமார் தலைமையிலான போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பெரியதோட்டம் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். ஆனால் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. கட்டுப்பாடுகள் என்ற பெயரில் உதவிகளை தடுப்பதுடன், எங்களை காவல் துறையினர் தரக்குறைவாக நடத்துகின்றனர்.
நோன்பு கஞ்சி காய்ச்சி வீடுகளுக்கே சென்று ஏழைகளுக்கு கொடுக்கவும் அனுமதி மறுக்கின்றனர். எனவே பெரியதோட்டம் பகுதிக்கு கட்டுப்பாடு மண்டல பகுதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். மக்களின் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவும் தகவல்:
இவற்றைத் தொடர்ந்து, இந்த போராட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக பஜ்ஜி, போண்டாவுக்காக நடத்தப்பட்ட போராட்டம் என, போராட்ட வீடியோக்களோடு தகவல்களை சேர்த்து பகிரப்பட்டு வருவது பெரியதோட்டம் பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரும் தமுமுக மாவட்ட தலைவருமான ஏ.நசீர்தீன் இந்து தமிழ் நாளிதழிடம் கூறும்போது,'ஊரடங்கால் யாரும் வேலைக்கு செல்லாத சூழலில் ஏழை மக்களுக்காக வெளியில் இருந்து வரும் உதவிகள் கட்டுப்பாட்டு காரணத்தை கூறி தடுக்கப்பட்டன. காலை 10 மணிக்கு மேல் பெண்கள், ஆண்கள் என யார் வெளியில் வந்தாலும் தகாத வார்த்தைகளால் திட்டுவது, கரோனாவை நாங்கள் பரப்புவது போல் வார்த்தைகளை பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இத்தனைக்கும் பள்ளிவாசல் மூடப்பட்டு, வீடுகளில் தான் தொழுகை நடைபெறுகிறது. ஏழைகளுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சி கொடுத்தாலும் காவல் துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இவற்றின் தொடர்ச்சியே மக்கள் போராட்டத்துக்கு காரணம். அதற்கு பிறகு இப்பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஆனாால் தற்போது போராட்டம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவது வருத்தமளிக்கிறது. பஜ்ஜி, போண்டா கடைகளுக்காகவோ, வேறு எந்த தவறான நோக்கங்களிலோ இந்த போராட்டம் நடைபெறவில்லை,' என்றார்.
மாநகர காவல் துணை ஆணையர் வி.பத்ரி நாராயணனிடம் கேட்டபோது,'இவ்விவகாரத்தில் காவல் துறையினர் மீது சுமத்தப்படும் புகார்களுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. பொதுமக்களுக்கு உரிய மதிப்பளித்து செயல்பட காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றார்.