

கோயம்பேட்டிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் மூலம் கரோனா பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். சந்தையை மூடும்போதே அரசு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்திருக்கவேண்டும் என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“புலம்பெயர்த் தொழிலாளர்கள் தமது ஊர்களுக்குத் திரும்ப மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்ததன் அடிப்படையில், அது தொடர்பான பணிகளைப் பல்வேறு மாநில அரசுகள் துவக்கியுள்ளன. தமிழக அரசின் சார்பிலும் அதற்கென அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையில் தமிழ்நாட்டில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் விரைவாக தம்மை சொந்த ஊருக்கு அனுப்பும்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று பல்வேறு மாநிலங்களில் இருக்கும் தமிழகத் தொழிலாளர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு ஏற்பாடு செய்வதில் தமிழக அரசு அக்கறையும், கவனமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
புலம்பெயர்த் தொழிலாளர்கள் இரண்டு வகைப்படுவர்- மாநிலத்துக்கு உள்ளேயே வெவ்வேறு மாவட்டங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள்; மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்து சென்றவர்கள். கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வேலை செய்த தொழிலாளர்கள் மாநிலத்துக்கு உள்ளேயே புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.
காய்கறி சந்தையை மூடுவதெனத் தமிழக அரசு முடிவெடுத்தபோதே அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத காரணத்தால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இப்படி திரும்பிப் போன தொழிலாளர்களால் நோய்த் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றி ஊர் திரும்பியவர்கள் உடனடியாகத் தம்மை ஆங்காங்கு உள்ள மருத்துவமனைகளில் ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவர்களால் அவர்களது உறவினர்களுக்கும், அவர்களது கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதை அவர்கள் உணர வேண்டும். எனவே, அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 5 இலட்சம் பேர் இப்போது முகாம்களில் உள்ளனர். அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு இதுவரை தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது தெரியவில்லை. அதுபோலவே பிற மாநிலங்களில் சிக்கிக் கொண்டுள்ள தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அழைத்து வரும் தொழிலாளர்களை நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் பின்னரே ஊர்களுக்கு அனுப்ப வேண்டும். நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.