

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் வீடியோ கான்ஃபரன்ஸில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வீடியோ கான்ஃபரன்ஸ் வசதியில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறையாகும். ஒரு மாத கோடை விடுமுறையில் விடுமுறை கால நீதிமன்றம் மட்டுமே நடைபெறும்.
இந்தாண்டு கோடை விடுமுறை ஒத்திவைக்கப்பட்டு, வீடியோ கான்பரன்ஸ் வசதியில் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாளை (மே 4 ) முதல் வீடியோ கான்ஃபரன்ஸில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிசியல்) டி.வி.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:
நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் ஜனவரி 1-க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள், ஆள்கொணர்வு மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் ஆகியோர் 2019 வரையிலான பொதுநல மனுக்கள், நீதிபதி பி.வேல்முருகன், 2015 முதலான அனைத்து வகையான உரிமையில் வழக்குகள், உரிமையியல் சீராய்வு மனுக்களை விசாரிக்கின்றனர்.
நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜாமீன், முன்ஜாமீன், ஜாமீன் நிபந்தனை தளர்வு மனுக்கள், நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், வரி, ஏற்றுமதி, இறக்குமதி, மதுவிலக்கு, கனிம வளம், வனம், தொழி்ல் துறை சார்ந்த ரிட் மனுக்கள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 407-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்றவியல் மனுக்களை விசாரிக்கின்றனர்.
நீதிபதி எம்.தண்டபாணி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மேல்முறையீடு, சிபிஐ, லஞ்ச ஒழிப்பு மனுக்கள், நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, கல்வி, நில சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஆர்.தாரணி, உரிமையியல் வழக்குகளின் இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள், நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மேல்முறையீடு மற்றும் குற்றவியல் சீராய்வு மனுக்களை (2018 ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ளவை) விசாரிக்கின்றனர்.
இவ்வாறு பதிவாளர் கூறியுள்ளார்.
இதையடுத்து நீதிபதிகள் நாளை விசாரிக்கவுள்ள 31 வழக்குகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.