Published : 03 May 2020 03:19 PM
Last Updated : 03 May 2020 03:19 PM

மதுரை கரோனா வார்டில் பணி: கோவில்பட்டியில் பயிற்சி மருத்துவர்கள் 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கோவில்பட்டி

மதுரை மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த 2 பயிற்சி மருத்துவர் கோவில்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி ராமையா நகர், 2-வது தெருவைச் சேர்ந்த பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அவருடன் மருத்துவமனையில் பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த பயிற்சி மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிற்சி மருத்துவர் கோவில்பட்டிக்கு கடந்த 1-ம் தேதி வந்துள்ளார்.

இதே போல், மதுரையில் இருந்து எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி மருத்துவரும் ஊருக்கு வந்துள்ளார். இதுகுறித்த தகவல் கோவில்பட்டி துணை சுகாதார அலுவலகத்துக்கு கிடைத்தது.

அவர்களது தகவலின் பேரில் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராமின் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் கோவில்பட்டியில் உள்ள பயிற்சி மருத்துவர் வீட்டுக்கு சென்று, முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கினர். மேலும், தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், இன்று காலை கோவில்பட்டி ஸ்ரீராம்நகர் நகர் நல மருத்துவமனைக்கு வந்த பயிற்சி மருத்துவரிடம் சளி, ரத்த மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

இதே போல், எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் உள்ள பயிற்சி மருத்துவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சளி, ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சி மருத்துவர்களுக்கும், அவர்களது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஹோமியோபதி சத்து மாத்திரை, கபசுர குடிநீர் தயாரிப்பதற்காக சூரணம் ஆகியவை வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x