Published : 03 May 2020 03:10 PM
Last Updated : 03 May 2020 03:10 PM

குடிசைப்பகுதிகளில் கூடுதல் கவனம்; இதே நிலையில் சில நாட்கள் நீடிக்கும்: பொதுமக்கள் அரசு சொல்வதை கடைபிடிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னையில் பெரும்பாலான பொதுமக்கள் நமக்கு வராது என்கிற அலட்சிய மனோபாவத்தில் நடக்கின்றனர். அரசு சொல்வதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் மிக முக்கியம் என சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் சிறப்பாக சிகிச்சை செய்தாலும் ஏன் இவ்வளவு அதிகரிப்பு உள்ளது. இதையும் நாங்கள் ஆராய்ச்சி செய்ததில் நமக்கு சவாலாக 5 மண்டலங்கள் உள்ளன. தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் இங்குதான் அதிக அளவில் உள்ளது.

கடந்த 2, 3 நாட்களில் அந்தப்பகுதிகளில் கண்காணிப்பு பகுதியில் ஒரு நபர் இருக்கும் இடங்களில் நோய்ப்பரவல் அதிகரிக்கிறது. அதுகுறித்து ஆய்வு செய்து அந்தப்பகுதிகளில் வரும் தரவுகளை வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதேப்போன்று வி.ஆர்.பிள்ளைத்தெரு, புளியந்தோப்பு பகுதியில் உள்ள தட்டாங்குளம், மார்க்கெட், மோதிலால் தெரு போன்ற அதிக தொற்று உள்ள இடங்களை ஆய்வு செய்கிறோம். கோயம்பேடு ஆய்வு செய்ய உள்ளோம். இங்கெல்லாம் ஆய்வு செய்ததில் பொதுமக்களிடம் எங்களுக்கு சில கோரிக்கைகள் உள்ளன.

கண்காணிப்புப்பகுதிகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல் குறித்த புரிதல் வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறோம். மாஸ்க் என்றால் என்.95 மாஸ்க் போடணும் என்கிற அவசியம் இல்லை. முகத்தை துணியை வைத்து மூடினால் போதும். மேலும் நாங்கள் நேற்று பல இடங்களில் பார்த்தபோது பொதுமக்கள் சாதாரணமாக முகக்கவசம் அணியாமல் ஊரடங்கு கால நினைவு இல்லாமல் தனி மனித இடைவெளியின்றி செல்வதை பார்க்கிறோம்.

அதேப்போன்று அண்ணா நகர் டவர் பகுதில் அங்கு சாதாரணமாக முகக்கவசம் இல்லாமல் மக்கள் செல்லும் போக்கை பார்க்கிறோம். பொதுமக்களிடம் எங்கள் அன்பான வேண்டுகோள் உலக சுகாதார நிறுவன ஆலோசனைப்பேரில்தான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்.

சென்னையில் பார்த்தால் ஒரு அலட்சிய மனோபாவம் இருக்கும் நிலை உள்ளது. எனக்கு சிம்டம் இல்லை வராது என நினைக்கிறார்கள். சிம்டம் இல்லாமல் வருகிறது. இது நுண்கிருமி என்பதால் அலட்சியமாக பார்க்கும் நிலை வருகிறது. முதியவர்கள், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வந்தால் உயிரிழப்புக்கும் காரணமாக அமையும்.

தமிழகத்தில் சிறப்பான சிகிச்சை இருந்தாலும் இதுபோன்று சென்னையில் பரவுதலுக்கு என்ன காரணம் என்று பார்க்கிறோம். இதையும் நாங்கள் ஆய்வு செய்தோம். கடந்த ஒருவார காலமாக ‘ஆய்வு செய்வது பிடிப்பது’ என்கிற அளவில் சோதனை செய்தோம்.

அதில் வரும் முடிவுகள் அதிக அளவில் பாசிட்டிவ் உள்ளது. அதில் வரும் முடிவுகள் இவ்வாறு உள்ள நிலையில் அடுத்து வரும் ஒரு வாரத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இருக்கும். நாம் அதில் அச்சம் கொள்ளத்தேவை இல்லை அதே நேரம் அலட்சியமாக இருக்கத்தேவை இல்லை.

நாங்கள் கேட்பது உடனடியாக சளி காய்ச்சல், மூச்சுத்திணறல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு வரவேண்டும். நாங்கள் இதுவரை கண்காணிப்பு இல்லாத ஏரியாக்களில் ஒவ்வொரு தொற்று நோயாளிகளை ஆய்வு செய்தபோது அதில் வந்த முடிவு என்னவென்றால் அவர்கள் மளிகைக்கடைக்குச் சென்றுள்ளார்கள், வேறு எங்காவது வெளியில் சென்றுள்ளார்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏதாவது ஒரு வேலையாக சென்றுள்ளார்கள், அல்லது முன்னணியில் செயல்படுபவர்கள் என தெரியவந்துள்ளது. அதைத்தடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.

இளம் அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவலர்கள், வருவாய்த்துறையினர் போன்றவர்கள் உயிரை பணயம் வைத்து இயங்கும்போது அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இதுதவிர பைக் ஆம்புலன்ஸ் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் குறுகிய பகுதிகளில் செய்ய உள்ளோம். வைட்டமின் சி அடங்கிய பானம் நல்ல தடுப்பு மருந்தாக உள்ளது.

அனைவருக்கும் விழிப்புணர்வு வேண்டும். ஊடகங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்துள்ளோம். பேசும்போது மாஸ்க்கை கழற்றிவிட்டு பேசக்கூடாது. அது தவறானது. நாங்கள் நோய்த்தொற்று அதிகரிக்கும் பகுதிகளாக சிலவற்றை கண்டறிந்துள்ளோம். குறுகிய சாலைகள், கண்காணிப்பு பகுதியில் உள்ள குறுகிய வீடுகள்.

பொதுக்கழிப்பிடங்கள், மார்க்கெட் பகுதிகள், மருத்துவமனைகளில் சமூக விலகலை அதிகம் கடைப்பிடிக்க சொல்லியிருக்கிறோம். குடிசைப்பகுதிகளில் அவர்களுக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு வசனங்கள் மூலம் சில மெசேஜ்களை கூறியுள்ளோம்.

ஊரடங்கு, சுயக்கட்டுப்பாடு புரிந்துக்கொள்ளுங்கள். தள்ளி நிற்றல், சமூக விலகல் மிக முக்கியம், கூட்டத்தை தவிர், தேவையற்ற விதத்தில் பொது இடத்துக்கு வராதே, பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது. உலக சுகாதார நிறுவனம், பிரதமர், முதல்வர், அரசு அனைவரும் கூறியுள்ள போது அதை அலட்சியமாக எடுத்து நமக்கு வராது என நினைக்காதீர்கள்.
பொதுமக்களுடன் பழகும் டெலிவரி பாய்ஸ் அவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறோம். மிண்ட் ,மண்ணடி, புளியந்தோப்பு கண்காணிப்பு பகுதி அவர்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காகத்தான் தனிமைப்படுத்துகிறோம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

தன்னார்வலர்கள் தங்களை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும். வி.ஆர்.பிள்ளைத்தெருவில் ஒரு தன்னார்வலரால் 51 பேருக்கு வந்துள்ளது. இது மற்ற பேரிடர் காலம் போல் கிடையாது. உங்களை நீங்கள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
மளிகைக்கடைக்கு மக்கள் செல்லாமல் போன் செய்தால் கொண்டுவந்து தரும்படி மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளோம். முன்னணியில் பணியாற்றும் அனைத்து தரப்பினருக்கும் சோதனை நடத்தி வருகிறோம்.

கோயம்பேட்டில் அனைவரும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிக அளவில் சோதனை நடத்துகிறோம். அதில் அதிக அளவில் முடிவுகள் வருவதை கண்டு பீதியடைய வேண்டாம்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் சோதனை செய்ய உள்ளோம். இந்த நேரத்தில் முன்னணியில் செயல்படும் அலுவலர், ஊழியர்களை நாம் ஊக்கப்படுத்தவேண்டும். மற்றவர்கள் அதிக அளவில் உஷாராக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கும்போது, பொதுமக்கள் கண்காணிப்பு பகுதியில் உள்ளவர்கள் சாதாரணமாக மாஸ்க் எதுவும் அலட்சிமாக செயல்படுவதை பார்க்கிறோம். பல பேர் என்ன நினைக்கிறார்கள் நமக்கு நோய் வராது என்று நினைக்கிறார்கள்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x