ஓய்வூதியம் முழுவதையும் அரிசியாக வாங்கி விநியோகிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

ஓய்வூதியம் முழுவதையும் அரிசியாக வாங்கி விநியோகிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
Updated on
1 min read

ஓய்வூதிய தொகை முழுவதையும் அரிசியாக வாங்கி தனது பகுதியிலுள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கிறார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கங்காதரன்.

நாள்தோறும் உழைத்தால்தான் உணவு என்ற சூழல் பலருக்கும் புதுச்சேரியில் உண்டு. ஆனால், தனது பகுதியில் உள்ளோருக்கு தன்னிடமிருந்த தொகையின் மூலம் உதவுவோரும் இங்கு பலருண்டு.

புதுச்சேரி நகரப்பகுதியில் பல சமூக அமைப்புகள் இல்லாதோருக்கு உதவிகள் பல செய்து வருகின்றனர்.

புதுச்சேரி பனையடிக்குப்பம் பகுதியில் தியாகி தலைவர் வையாபுரி நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தனது ஓய்வூதியத்தொகையை அரிசியாக மாற்றி 5 கிலோ வீதம் அப்பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு வீடாக சென்று தந்துள்ளதாக பலரும் குறிப்பிட்டனர்.

இதுதொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, "இளநிலை கணக்கு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன். ஓய்வூதியம் ரூ. 40 ஆயிரம் வருகிறது. கரோனாவால் வீட்டில் தான் இருக்க வேண்டிய சூழல் பலருக்கு உள்ளது. அதே நேரத்தில் தினமும் உழைத்தால்தான் உணவு என்று உள்ளோர் பலர்.

அவர்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். அதனால் எனது பங்காக ஒரு மாத ஓய்வூதியத்தொகை முழுவதையும் அரிசியாக வாங்கி ரூ. 5 கிலோ வீதம் பாக்கெட் போட்டு வீடு வீடாக சென்று சுமார் 300 குடும்பங்கள் வரை தந்துள்ளேன். என்னால் முடிந்த சிறு உதவி இது" என்று இயல்பாக குறிப்பிடுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in