

பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மகளிர் குழுக்களுக்கு 10 நாட்களுக்குள் கடன் உதவி அளிக்கப்பட்ட உள்ளதாக தஞ்சை மண்டல கரோனா கண்காணிப்பு சிறப்பு அதிகாரி சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''நாகை மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக கடன் உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் குறைந்த வட்டியில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தொகையை 10 தினங்களுக்குள் வழங்க வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து தங்கள் பகுதிக்கு வரும் நபர்கள் குறித்து, பொதுமக்கள் 1077 மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். சென்னை, பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து நாகைக்கு வந்தால் கரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். மாவட்டத்திற்கு உள்ளே வருபவர்களை தனிமைப்படுத்த நாகை, மயிலாடுதுறையில் தனித்தனி அறைகள் கொண்ட 3 மையங்கள் தயாராக உள்ளன.
தற்போதைய நிலவரப்படி நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளான 42 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இன்னும் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.