

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் நேற்று மீண்டும் பணிக்குத் திரும்பினார்.
டிஎஸ்பி கார்த்திகேயன் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் தனது மனைவி மங்கையர்க்கரசியைச் சந்திப்பதற்காக பத்து நாட்கள் முன்னதாக, தனது குழந்தைகளுடன் வாலாஜாபாத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று வந்தார். இந்நிலையில், கார்த்திகேயனின் மனைவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கார்த்திகேயன் ஏப்ரல் 22-ம் தேதி முதல் சிதம்பரத்தில் உள்ள டிஎஸ்பி குடியிருப்பில் குழந்தைகளையும் தன்னையும் தனிமைப்படுத்திக் கொண்டார். சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டார். இரண்டு முறை செய்யப்பட்ட கரோனா தொற்றுப் பரிசோதனைகளில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. மேலும், தொற்றுக்கு உள்ளான அவரது மனைவியும் முழுமையாக குணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வைரஸ் தாக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டிருந்த கார்த்திகேயன், கடலூர் எஸ்.பி. ஶ்ரீ அபிநவ் அனுமதியுடன் சனிக்கிழமை மீண்டும் தனது வழக்கமான பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார்.