

மே 4 முதல் சென்னையில் என்னன்ன தளர்வுகள் உள்ளது அவைகளை எப்படி அனுமதிக்கலாம் என்பன உள்ளிட்ட நடைமுறைகளை ஆராய சென்னையின் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று நடந்த அமைச்சரவையின் நீண்ட கூட்டத்திற்குப் பின்னர் தமிழகத்தில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ண மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதில் சென்னை மாவட்டத்திற்கு தனியாக சில முடிவுகளும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்கள் குறித்தும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் சென்னையில்தான் அதிகம் என்பதால் சென்னையில் சிறப்பான ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டு வருகிறது. சென்னைக்கு மட்டுமே மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், ஆட்சியர் தவிர 10 ஐஏஎஸ் அதிகாரிகள், அதற்கு இணையாக ஐபிஎஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த பொதுமக்கள், சிறுவியாபாரிகளுக்கும் தொற்று பரவியுள்ளது. சென்னையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நாளை முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்க கூடிய நிலையில் , சென்னையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து , சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மூவரும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.