

நெல்லையில் புதிதாக தேர்வான பெண் காவலர்கள் 165 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
காவல் துறைக்கு அண்மையில் 5,496 ஆண், பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பயிற்சி பெறாத அவர்களை கரோனா தடுப்பு பணியில் பயன்படுத்த காவல்த்துறை முடிவு செய்தது.
இந்நிலையில், நெல்லையில் தேர்வான பெண் காவலர்கள் 165 பேருக்கும் முதலில் அரசு மருத்துவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதன் பின்பு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
தொற்று இல்லாதது உறுதியானவுடன் தனி மனித இடைவெளியில் தங்க வைக்கப்பட்டு 15 நாட்கள் அடிப்படை பயிற்சி கொடுக்கப்பட்டு நெல்லை தென்காசி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 5 நபர்களாக பணி அமர்த்தப்படுவிருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் இந்த எண்ணிக்கை 63 ஆக அதிகரித்திருந்தது. இதில் 54 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளவர்களுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 7 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
இதேபோல் தென் காசி மாவட்டதில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 38 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. நன்னகரம் கரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், புளியங்குடியும் மெல்ல விடுபட்டு வருகிறது.
இருப்பினும் இந்த மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்கிறது. இதனால் புதிதாக தேர்வான காவலர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 5 நபர்களாக பணி அமர்த்தப்படுவிருக்கிறார்கள்.