நடிகர் சிவாஜி கணேசன் யாருக்கு சொந்தம்?- விஜயதாரணிக்கு ஜெயலலிதா பதில்

நடிகர் சிவாஜி கணேசன் யாருக்கு சொந்தம்?- விஜயதாரணிக்கு ஜெயலலிதா பதில்
Updated on
1 min read

உலகத் தமிழர்களுக்கு சொந்த மான நடிகர் சிவாஜி கணேசனை குறுகிய வட்டத்துக்குள் அடைக்க வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை படித்த முதல்வர் ஜெயலலிதா, ‘நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும்’ என அறிவித்தார்.

இதற்காக செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்), ஏ.நாராயணன் (சமக), எம்.கலையரசு (பாமக), எஸ்.குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்), அருண்பாண்டியன் (அதிருப்தி தேமுதிக), செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துப் பேசினர். அப்போது நடந்த விவாதம்:

எஸ்.விஜயதாரணி (காங்கிரஸ்):

நடிகர் சிவாஜி கணேசனும், எம்.ஜி.ஆரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள்.

விஜயதாரணி இவ்வாறு கூறிய தும் அமைச்சர்களும், அதிமுக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா (குறுக் கிட்டு):

நடிகர் சிவாஜி கணேசன் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. இந்த நாட்டுக்கே சொந்தமானவர். உலகம் முழுவதும் உள்ள தமிழர் களுக்கு சொந்தமானவர். தமிழ் நடிகர்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு சொந்த மானவர். அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க வேண்டாம்.

விஜயதாரணி:

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு நன்றி. காங்கிரஸில் இருந்தவர் என்பதால் எங்களுக்கு பெருமை என்பதால் அப்படி குறிப்பிட்டேன். அவர் எல்லோ ருக்கும் சொந்தமானவர் என்பதில் சந்தேகமில்லை.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட் சியே வேண்டாம் என முடிவு செய்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கியவர் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in