

சிகப்பு மண்டலத்தை நோக்கி நகரும் விழுப்புரம் மாவட்டம்; 25 பேர் புதிய நோய் தொற்றால் பாதிப்பு; 11 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் நேற்று வரை விழுப்புரம் மாவட்டத்தில் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குணமடைந்த 27 பேர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, செஞ்சி, கப்பியாம்புலியூர், அரசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வெளிமாவட்டங்களில் மற்றும் கோயம்பேடிலிருந்து வந்த சுமார் 350 பேர் கரோனா பரிசோதனைக்காக தங்கவைக்கப்பட்டு அவர்களிடம் பரிசோதனை நடைபெற்றது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை வட்டாரங்களில் கேட்டபோது, சுமார் 300 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இவர்களில் வெளிமாவட்டங்கள் மற்றும் கோயம்பேடில் இருந்து வந்த 2 குழந்தைகள் உட்பட 25 பேர் தற்போதுவரை விழுப்புரம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் சொந்த கிராமமான 11 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கிராமங்களுக்கு சேவையாற்ற அமைக்கப்பட்ட வங்கிகள் , மின்வாரிய அலுவலகம் ஆகியவற்றை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று மாலை எத்தனை பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு அறிவித்த ஆரஞ்சு மண்டலத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம் சிகப்பு மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடதக்கது.
பட விளக்கம்; விழுப்புரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களிடம் காவல்துறையினர் விவரங்களை பதிவு செய்கின்றனர்.