

மதுரை - ஊமச்சிகுளம் இடை யிலான பறக்கும் பாலப் பணி 38 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.
மதுரை-நத்தம் இடையே நான்குவழிச் சாலை அமைக் கப்படுகிறது. இதில், மதுரை-ஊமச்சிகுளம் இடையே 7.8 கிமீ நீளத்துக்கு பறக்கும் பாலமாக அமைக்கப்படுகிறது. அங்கிருந்து நத்தம் வரை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரூ.1,000 கோடி செலவிலான இத்திட்டம் 2018 நவம்பரில் தொடங்கப்பட்டது. 2020 நவம்பரில் முடிக்கப்பட வேண்டும். வடமாநிலத் தொழி லாளர்கள் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பாலப் பணிகளில் ஈடு பட்டிருந்தனர்.
கடந்த மார்ச் 24 முதல் கரோனா ஊரடங்கால் மேம்பாலப் பணிகள் நிறுத்தப்பட்டன. வடமாநிலத் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். உள்ளூர் பொறியாளர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர்.
நேற்று முதல் ஊரகப் பகுதிகளில் குறைந்தளவு பணியாளர்களைக் கொண்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து மதுரை-ஊமச்சிகுளம் பறக்கும் பாலப் பணிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கப் பட்டன.
இதுகுறித்து நத்தம் நான்கு வழிச் சாலைத் திட்ட இயக்குநர் சரவணன் கூறியதாவது:
மத்திய அரசு உத்தரவுப்படி மாநகராட்சி தவிர்த்து, புறநகரில் மட்டும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்து சமூக இடைவெளியுடன் தொழி லாளர்கள் பணியாற்றுவர்.
திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிப்பது இயலாது. முழு வீச்சில் பணிகள் தொடங்க 4 மாதம் கூட ஆகலாம் என்றார்.