

‘இந்து தமிழ்' நாளிதழ் வெளி யான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. இன்று கோவை குறிஞ்சி நகர், கீரணத்தம் முகவர் கே.ரங்கசாமி பேசுகிறார்.
எங்கள் பகுதியில் தமிழ், ஆங்கிலம், மலையாள பத்திரிகைகள் அனைத்திற்கும் நான்தான் முகவர். இதனால் இந்த வட்டாரத்தில் பத்திரிகை வாசிக்கிற பழக்கமுள்ள அத்தனை பேருடனும் எனக்கு நல்ல பழக்கமுண்டு. அவர்களது உதவியோடு, 10, 12-ம் வகுப்பில் 100-க்கு 100 மதிப்பெண் பெறுகிற மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்குவது, தொடங்கி மரக்கன்றுகள் நடுவது வரையில் நிறைய நல்ல காரியங்களைச் செய்கிறேன். அதுபோன்ற பணி களில் இந்து வாசகர்கள் கூடுதலான பங்களிப்பு செய்வதை கவனிக்கிறேன்.
பாலாஜி கார்டன் அசோசியே ஷன் செயலாளராக இருக்கிற எஸ்.உதயகுமார் சார் வாசிப்பைத் தாண்டி ஏதாவது இந்த சமூகத்துக்குச் செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார். "எப்படி சார் இவ்வளவு சமூக பொறுப்போடு இருக்கிறீர்கள்?" என்றால், "நான் இந்து தமிழ் வாசகர். அதிலும் சமஸ் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவன். இவ்வளவு கூட சமூக அக்கறை இல்லாவிட்டால் எப்படி?" என்று பதிலுக்குக் கேட்பார்.
‘இந்து தமிழ்' நாளிதழில் வருகிற பள்ளி மாணவர்களுக்கான எந்தப் போட்டியாக இருந்தாலும் சரி, ஐஏஎஸ் பயிற்சி குறித்த விளம்பரமாக இருந்தாலும் சரி அதனை உடனே அதை போட்டோ எடுத்து தங்கள் குடியிருப்போர் சங்க வாட்ஸ்- ஆப் குழுவில் போட்டுவிடுவார். அவர் பிஸியான கட்டிட காண்ட்ராக்டர். ஆனாலும், தங்கள் குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றி, "மறு சுழற்சி செய்ய ஏதாவது உதவ முடியுமா?" என்று என்னிடம் கேட்பார். வாசிப்பைத் தாண்டிய செயற்பாட்டாளர்களாக வாசகர்களை உருவாக்குகிற நாளிதழ் இந்து என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.