

திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில், மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி யில் நிவாரணப் பொருட்கள் பெறு வதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் நேற்று குவிந்தனர்.இதில், சிலர் முகக் கவசங்கள் இல்லாமல், அருகருகே பல மணிநேரம் காத்திருந்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அதேபோல, வெளியூர் செல்வதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் கடிதம் பெறச் செல்லும் தொழிலாளர்களும் சமூக விலகலை கடைப்பிடிப்பதில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றனர்.
வழக்குப் பதிவு
திருப்பூர் போலீஸார் கூறும்போது, "மங்கலத்தை சேர்ந்த ஒருவர், ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரித்து, சரக்கு வாகனத்தில் அப்பகுதியினருக்கு வழங்க முயன்றுள்ளார். இது தொடர்பாக வரப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவு இருப்பதால், இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். உத்தரவை மீறி வெளியில் சுற்றியது தொடர்பாக 10,210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,249 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 10,841 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.
தண்ணீர் திறப்பு
திருப்பூர் மற்றும் நொய்யல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் சின்னமுத்தூர் தடுப்பணையில் நீர்மட்டம் அதிகரித்தது. இதையடுத்து, கரூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கார்வழி அணைக்கு விநாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சின்னமுத்தூர் தடுப்பணையில் 15 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், டீ.டி.எஸ். 958-ஆக உள்ளது. கோடைமழையால் நொய்யலில் வந்த மழை நீர், கார்வழி நீர்தேக்கத்துக்கு திறந்துவிடப்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.