Last Updated : 10 Aug, 2015 08:51 AM

 

Published : 10 Aug 2015 08:51 AM
Last Updated : 10 Aug 2015 08:51 AM

இக்கட்டான தருணத்தில் திருச்சி மாணவிக்கு கிடைத்த அரிய உதவி: வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

ஏழை மாணவிக்கு மனிதநேய அடிப்படையில் கலந்தாய்வின் போது உதவி வழங்கி, கல்வி என்பது கற்போருக்கு வழங்கும் மிகப் பெரிய சேவை என்பதை நிரூபித்துள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த ராஜேந்திரன் - தங்கப்பொண்ணு தம்பதியினரின் மகள் ஆர்.சுவாதி. அரசுப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1,017 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பி.எஸ்சி. வேளாண் படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஏனைய போட்டி மாணவர் களைக் காட்டிலும் கட்-ஆப் மதிப் பெண் குறைவாக இருந்ததால், உடனடியாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கலந்தாய்வின்போது இடம் கிடைத்து வேளாண் படிப்பைத் தேர்வு செய்த மாணவர்கள் சிலர், வேறு படிப்புக்குச் சென்றுவிட் டதைத் தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுவாதிக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு பல்கலைக் கழகம் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

தவறுதலாக சென்னைக்கு..

அழைப்புக் கடிதத்தில், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அண்ணா அரங் கில் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆனால், கோவை யில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்துக்கு வருவதற்கு பதிலாக, மாணவியும், அவரது தாயாரும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 8-ம் தேதி காலை 6.30 மணி அளவில் சென்றபோதுதான் தவறுதலாக மாறி வந்தது, அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

கலக்கத்துடன் அங்கு நின்ற அவர்களை சந்தித்த மனிதநேய மிக்க ஒரு நபர், விவரங்களைக் கேட்டறிந்தார். வேளாண் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு அழைத்து பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் தொலைபேசி எண்ணைப் பெற்று விவரத்தைக் கூறியுள்ளார். அந்த மாணவியை விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும், ஒரு மணிக்கு பல்கலைக்கழகம் வந்துவிடுவார்கள் என்பதால் கலந்தாய்வுக்கு அனுமதிக்கு மாறும் கோரியுள்ளார்.

விமான டிக்கெட்

இதனை ஏற்றுக்கொண்ட பதிவாளர், மாணவியின் விவரங்களைப் பெற்று கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித் துள்ளார். இதையடுத்து, சென்னை யில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு நேற்று முன்தினம் பகல் 11.30 மணிக்கு வந்தடைந்த மாணவியையும், அவரது தாயா ரையும் பல்கலைக்கழகத்தின் காரை அனுப்பிவைத்து அழைத்துவரச் செய்துள்ளார் துணைவேந்தர். பின்னர், பிற்பகலில் நடைபெற்ற கலந்தாய் வுக்கு நேரம் ஒதுக்கித் தரப் பட்டது.

மாணவி ஆசைப்பட்ட பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். உணவுத் தொழில்நுட் பவியல் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. மனிதாபிமானம் உள்ள ஒரு நபர், தனது சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்ததன் மூலமாகவும், பல்கலைக்கழகம் தகுந்த நேரத்தில் வழங்கிய உதவி காரணமாகவும் மாணவியின் வேளாண் படிப்பு ஆசை நிறைவேறியுள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் கூறும்போது, "அன்றைய தினம் காலையில் ஓர் அழைப்பு வந்தது. அந்த மாணவியின் நிலை குறித்து கூறினர். அந்த மாணவிக்கான கலந்தாய்வு பதிவு எண், விவரங்களை குறுந்தகவலாக பெற்று, கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தேன்.

அவர்கள் கூறியபடி உரிய நேரத்தில் வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு படிப்பைத் தேர்வு செய்தனர். நான், எனது பணியைத்தான் செய்தேன். எனக்கு அழைத்த அந்த நபரின் எண்ணை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன்" என்றார்.

முகம் தெரியாத நபரின் மனிதாபிமானம்

பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி கூறும்போது, "மனிதநேயம் இல்லாத வாழ்க்கை நல்ல வாழ்க்கை கிடையாது. மாணவியின் நிலையை அறிந்து சமயோசிதமாக செயல்பட்டு அனுப்பி வைத்த முகம் தெரியாத அந்த நபருக்குத்தான் எல்லா பெருமையும் சேரும். இருப்பினும், பிளஸ் 2 படித்த மாணவி, தனக்கு வந்த கடிதத்தை சரியாகப் படிக்காமல் இருந்ததை நினைத்து வருத்தம் கொள்கிறேன். அந்த மாணவிக்கு உரிய நேரத்தில் அந்த நபருடைய உதவி கிடைத்ததால் தான் வர முடிந்தது. இல்லையென்றால் நாங்கள் நினைத்தாலும் இடம் வழங்க முடியாது. சமூகத்தில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதை நாம்தான் சரியாக பயன்படுத்த வேண்டும். அனுமானத்தில் ஒருபோதும் செயல்படக்கூடாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x