

கள்ளிக்குடி உழவர் அங்காடியில் ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்ட விவசாயிகளும் நாளை(மே 4) முதல் நேரடியாக காய்கறி விற்பனையில் ஈடுபட உள்ளனர்.
திருச்சி காந்தி மார்க்கெட்டை இடம் மாற்றுவதற்காக மணி கண்டம் அருகே கள்ளிக்குடியில் பல கோடி ரூபாய் செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது.
இதுவரை இந்த வளாகம் செயல்பாட்டுக்கு வராத நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையிலான திருச்சி மாவட்ட மனித வளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 27-ம் தேதி மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளை சேர்ந்த விவசா யிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யத் தொடங்கினர்.
முதல் நாளில் 32 விவசாயிகள் கடைகள் அமைத்து, சுமார் 5 டன் அளவிலான நாட்டு காய்கறிகளை விற்பனை செய்தனர்.
குறைந்த விலைக்கு கிடைப் பதாலும், காய்கறிகள் புதிதாக இருப்பதாலும் இவற்றுக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைத்தது.
இதனால் கள்ளிக்குடி உழவர் அங்காடிக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அங்காடி செயல்படத் தொடங்கிய ஒரே வாரத்துக்குள் நாளொன்றுக்கு இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் எடை 8 டன்னை தாண்டிவிட்டது.
இதற்கிடையே உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை அவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மூலம் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக தற்போது ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்ட விவசாயிகளும் கள்ளிக் குடி உழவர் அங்காடிக்கு வரவுள் ளனர்.
இதுகுறித்து உழவர் அங்கா டியின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ் ணன் கூறியதாவது:
உள்ளூர் விவசாயிகள் மூலம் நாட்டு வகை காய்கறிகள் தரமானதாக விற்பனைக்கு வைக் கப்பட்டாலும்கூட உருளைக் கிழங்கு, கேரட் உள்ளிட்டவையும் இருந்தால் நன்றாக இருக்கும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.
அதன் தொடர்ச்சியாக ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள உழவர் கூட்டமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
காய்கறிகளை ஏற்றி வருவ தற்கான வாகனச் செலவை நாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், விவசாயிகளே தங்களின் விளை பொருட்களை நேரடியாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தோம். மக்களின் நலன்கருதி அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதன்படி உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், பாகற் காய், அவரைக்காய், பீட்ரூட், சௌசௌ உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் மே 4-ம் தேதி(நாளை) முதல் இங்கு கொண்டு வரப்பட்டு, விவசாயிகளால் விற்பனை செய் யப்பட உள்ளன என்றார்.