

சென்னையில் கரோனா தொற்று பரவலை தடுக்கவும், தொற்று ஏற்பட்டோருடன் தொடர்பில் இருப்போரை தனிமைப்படுத்தவும் 43 ஆயிரம் படுக்கைகள் தயார்நிலையில் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்பு பொறுப்பு அதிகாரி, சிறப்புகண்காணிப்புக் குழு, மண்டலகண்காணிப்பு குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவசங்களை முழுமையாக வழங்க வேண்டும். கிருமிநாசினிகள் இரு மாதங்களுக்கு இருப்பில் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் வருவதைதடுக்க, போலீஸாருடன் இணைந்து அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விதிமிறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து அம்மா உணவகங்களிலும் 3 வேளையும் தரமான, சூடான உணவுகள் இலவசமாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் வெளியில் வருவதை தடுக்க 4 ஆயிரத்து 949 நடமாடும் கடைகள் மூலம் காய்கறிகள், 1100 நடமாடும் கடைகள் மூலம் மளிகை பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.
நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் அருகில்உள்ள குடும்பத்தினர் மற்றும்நெருங்கியவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் 21 ஆயிரத்து 866 படுக்கை, நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 21 ஆயிரத்து 108 படுக்கை என சுமார் 43 ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவில் 9 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 14 சதவீதம் தமிழகத்தில் செய்யப்பட்ட பரிசோதனைகளாகும். எனவே மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஹர்மந்தர்சிங், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளான ஜெ.ராதாகிருஷ்ணன், ராஜேந்திர குமார், தா.கார்த்திகேயன், கா.பாஸ்கரன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.