Published : 02 May 2020 09:23 PM
Last Updated : 02 May 2020 09:23 PM

பெருந்தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் இயங்க செய்ய வேண்டியது என்ன?- தமிழக அரசு விளக்கம்

ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் தளர்வு குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுத்து அறிவித்தது. அதில் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றியும், போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தியும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரிவதைக் கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை ((Standard Operating Procedures) தீவிரமாக கடைப்பிடிப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள் ((AgroProcessing), தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏடிஎம், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்கு தடையின்றி தொடர்ந்து முழுமையாகச் செயல்படலாம்.

கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்.

பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமானப் பணிகளுக்கும், பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டுகள் பெற வேண்டும்.

நகரப் பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள் / வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அந்த வாகனங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புறத் தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவிகிதப் பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x