

நாகர்கோவிலில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் பரிவட்டம் கட்டி துப்பாக்கி ஏந்தி போலீஸார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் நாகர்கோவில் மாநராட்சிப் பகுதியில் மட்டும் 246 நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், 652 தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கரோனா தொற்றுத் தடுப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியினைப் பாராட்டி தூய்மைப் பணியாளர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று (மே 2) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை வகித்தார். நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், நகர்நல அலுவலர் கிங்சால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, எஸ்.பி. ஸ்ரீநாத் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களின் அரும்பணியை வெகுவாகப் பாராட்டினர். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்குப் பழத்தட்டுகள் வழங்கபட்டுச் சிறப்பிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 25 தூய்மைப் பணியாளர்களுக்குத் தலையில் பரிவட்டம் கட்டியும், காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தியும் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
அப்போது, "கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கப்பட்டதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தூய்மைப் பணியாளர்களுக்கு நேரில் நன்றி செலுத்துவதற்கு இந்த விழாவைப் பயன்படுத்திக் கொண்டோம்.
தங்களது குடும்பம், குழந்தைகளைப் பாராமல் சுயநலம் கருதாமல் உயிரைப் பணயம் வைத்து இப்பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் சேவை போற்றுதலுக்குரியது. தூய்மைப் பணியாளர்கள் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயலாற்றி வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.