Published : 02 May 2020 06:39 PM
Last Updated : 02 May 2020 06:39 PM

குஜராத்தில் இருந்து தமிழகம் திரும்பிய கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 13 பேர்: ஓசூர் எல்லையில் தனிமைப்படுத்திக் கண்காணிப்பு

ஓசூர் ஜுஜுவாடி கரோனா கண்காணிப்பு மையத்தில் தங்கியுள்ள குஜராத்திலிருந்து திரும்பியவர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ள மருத்துவப் பணியாளர்.

ஓசூர்

குஜராத் மாநிலத்தில் இருந்து சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்குத் திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரும் தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் உள்ள கரோனா பரிசோதனை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே மாதம் 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின்படி வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வரும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி குஜராத் மாநிலத்தில் தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள் 13 பேரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள வழிபாட்டுத் தலத்துக்கு சுற்றுலா சென்றிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் 13 பேரும் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் குஜராத் மாநிலத்திலேயே தங்கியிருக்க நேர்ந்தது. தற்போது மத்திய அரசின் உத்தரவு காரணமாக குஜராத் மாநில அரசின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் இருந்து வேன் மூலமாகப் புறப்பட்டு பெங்களூரு வழியாக நேற்று இரவு 11 மணியளவில் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியை வந்தடைந்த 13 பேருக்கும் முதல்கட்ட உடல் பரிசோதனை நடத்தப்பட்டு தமிழக எல்லையில் உள்ள கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் வட்டாட்சியர் வெங்கடேசன் கூறியதாவது:

‘’தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர் குழு மூலமாக அனைவரின் ரத்த மாதிரி, சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ள அனைவருக்கும் உணவு, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ஜுஜுவாடி, அந்திவாடி, கக்கனூர், பாகலூர், பேரிகை, அஞ்செட்டி, தளி உள்ளிட்ட 16 சோதனைச் சாவடிகளிலும் தமிழகத்துக்குள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வராமல் தடுக்கும் வகையில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’.

இவ்வாறு வட்டாட்சியர் வெங்கடேசன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x