

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 13 ஆயிரம் கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 16 ஆயிரத்து 442 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால், நேற்று காலை 6 மணி முதல் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், மேற்கு கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.59 அடியாகவும், தண்ணீர் இருப்பு 54.48 டி.எம்.சி.யாகவும் உள்ளது.