Published : 02 May 2020 01:46 PM
Last Updated : 02 May 2020 01:46 PM

முழு மதுவிலக்கைச் செயல்படுத்த இதுவே தக்க தருணம்; மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுக: வைகோ

முழு மதுவிலக்கைச் செயல்படுத்த இதுவே தக்க தருணம் என்றும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (மே 2) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதியிலிருந்து மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் நோய்த் தொற்று இல்லாத ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலப் பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கின்றது. அனைத்து மண்டலத்திலும் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகளைத் திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஊரடங்கு அமலில் இருக்கும்போது, மார்ச் 24 ஆம் தேதி முதல் இன்றுவரை டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுவால் சீரழிந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. புது வசந்தத்தை அனுபவித்து வரும் அத்தகைய ஏழை, எளிய குடும்பங்களை மீண்டும் துயரப் படுகுழியில் தள்ளும் கொடிய செயலில் தமிழக அரசு இறங்கக் கூடாது.

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால், பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் மகிழ்ச்சி அலை மோதுகிறதேயொழிய, எங்கும் எந்தவித வேண்டத்தகாத நிகழ்வுகளும் நடக்கவில்லை. சட்டம் ஒழுங்கு கெடவில்லை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களும் குறைந்துள்ளன.

மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு இதுவே தக்க தருணம் என்பதை தமிழக அரசு முழுமையாக உணர வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கடந்த நிதி ஆண்டில் அரசுக் கருவூலத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் வந்ததாக தமிழக நிதித்துறைச் செயலாளர் தெரிவித்து இருந்தார்.

மதுபான வருவாய் அதிகரித்து இருப்பதற்கு என்ன காரணம்? என்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, இங்கு மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று அமைச்சர் ஒருவர் பதில் அளித்தார்.

ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் பதவி ஏற்றவுடன், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்து, 500 மதுக்கடைகளை முதல் கட்டமாக மூடி உத்தரவிட்டார்.

ஆனால், இன்று என்ன நிலைமை? எடப்பாடி பழனிசாமி அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக புதிதாக 2,295 டாஸ்மாக் மதுக் கடைகள் திறந்ததால், தற்போது மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 5,152 ஆக உயர்ந்து இருக்கிறது.

"டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்; முழு மதுவிலக்கே; நமது இலக்கு" என்பதை வலியுறுத்தி, 2012 டிசம்பர் 12 ஆம் தேதி, கடல் அலைகள் தாலாட்டும் நெல்லை மாவட்டம் உவரியிலிருந்து மதுரை மாநகர் வரை நடைப்பயணம் தொடங்கினேன். பின்பு காஞ்சி மாவட்டம் கோவளத்திருந்து, மறைமலை நகர் வரையிலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து, ஈரோடு வரையிலும் மூன்று கட்டங்களாக சுமார் 3,000 கிலோ மீட்டர் நடைப்பயணம் நடந்தபோது, லட்சக்கணக்கான தாய்மார்களின் உள்ளக் குமுறலை நேரில் கண்டேன்.

அதன்பின்னர் கொந்தளித்துப் போன தாய்மார்கள் தன்னெழுச்சியாக வெகுண்டு எழுந்து டாஸ்மாக் மதுக்கடைகளை உடைத்து நொறுக்கும் வீரம் செறிந்த காட்சிகளை நாடே பார்த்தது.

தமிழக அரசு, இனி எக்காரணம் கொண்டும் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது, மது விற்பனை வருவாயை ஈடுகட்ட பல வழிகள் இருக்கின்றன. முதலில் ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கை முழுமையாகப் பெற்று, மத்திய அரசில் நமது உரிமையைத் தட்டிக் கேட்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

முழு மதுவிலக்கு என்பதைச் செயல்படுத்துவதற்கான பொன்னான இந்த வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மக்கள் சீரழிந்தால் என்ன? எக்கேடு கெட்டல் என்ன? மது விற்பனை வருமானம்தான் முக்கியம் என்று கருதினால் தமிழகத்துத் தாய்மார்கள் மதுரையை எரித்த கண்ணகியைப் போல போர்க்கோலம் பூணுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x