Published : 02 May 2020 01:38 PM
Last Updated : 02 May 2020 01:38 PM

எங்களால் முடிந்தது எங்கள் மக்களுக்கு..!- கரோனாவை எதிர்க்கக் கைகோத்த இரவிபுதூர் கிராமத்து இளைஞர்கள்

பொதுமுடக்கத்தால் ஏழைகளின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பாதிப்பைக் குறைக்கும் விதமாக எளிய மக்களுக்கு அவர்களது சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே தன்னெழுச்சியாக உதவி வருகின்றனர். அப்படித்தான் குமரி மாவட்டம் இரவிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து வருகிறார்கள்.

பொதுமுடக்கத்தால் தங்கள் பகுதியில் முடங்கிக் கிடக்கும் ஏழைகளுக்கு உதவுவதற்காகக் கைகோத்த இந்தக் கிராமத்து இளைஞர்கள், குறிப்பிட்ட ஒரு பணிதான் என்றில்லாமல் பலவகையான சேவைகளைச் செய்து இந்த கரோனா காலத்தில் தங்கள் பகுதி மக்களின் நம்பிக்கை மனிதர்களாகவும் உருவெடுத்திருக்கிறார்கள். இவர்கள் அப்படி என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

இதோ அவர்களே அதைப் பட்டியலிடுகிறார்கள். “எங்கள் ஊரில் 480 வீடுகள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் வீட்டுக்கு ஒரு சானிடைசர் வழங்கினோம். ஊர் முழுவதும் சேர்த்து 1,472 மாஸ்க் கொடுத்தோம். இதை எங்கள் ஊரைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்கள் இலவசமாகவே தைத்துக் கொடுத்தார்கள். நாங்களும் துணியைக் கட் செய்வது உள்ளிட்ட உதவிகளைச் செய்தோம். ஊரில் தகுதி வாய்ந்த ஏழைகளைத் தேர்ந்தெடுத்து கடந்த ஒருமாதமாகவே அவர்களுக்கு ஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் மிகுந்த தரமான மதிய உணவை வழங்கி வருகிறோம்.

சென்னை சித்த மருத்துவக் கல்லூரியில் இருந்து கபசுரக் குடிநீர் பொடி, வாதசூரணப் பொடி ஆகியவற்றைப் பெற்று ஊர் முழுவதும் விநியோகித்து இருக்கிறோம். ஊரில் ஏழ்மை நிலையில் இருக்கும் 250 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான 18 வகையான மளிகைப் பொருள்களையும் வழங்கியுள்ளோம்.

எங்களின் இந்த முயற்சிக்கு பல நல்ல உள்ளங்கள் முதுகெலும்பாக இருந்து உதவினார்கள். ஊரைச் சேர்ந்த பெரியவர்கள், ஊரில் இருந்து வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்களும் எங்களுக்கு ஊக்குவிப்பாக இருந்து இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். நாங்கள் வெறுமனே கருவிதான்” என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார்கள் இரவிபுதூர் கிராமத்து இளைஞர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x