

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சென்னையில் தேமுதிக நடத்த இருந்த மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஆக.10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் கோயம்பேடு முதல் கோட்டை வரை நேற்று (வியாழக்கிழமை) மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த தேமுதிக முடிவு செய்திருந்தது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, தேமுதிக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செந்தாமரைக்கண்ணன், மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று காலை மனு ஒன்றை தாக்கல் செய்ததுடன் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார். இதையடுத்து, இந்த மனு அவசர வழக்காக எடுக்கப்பட்டு நேற்று பிற்பகல் நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜாராகி வாதிடும்போது, “சென்னை நகரில் முக்கிய இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேமுதிகவினர் முக்கிய சந்திப்புகளில் மனிதச் சங்கிலி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படும். எனவே, மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது” என்றார்.
தேமுதிக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.டி.பாலாஜி, மனிதச் சங்கிலி போராட்டம் சாலை யோரத்தில் நடத்தப்படுவதால் போக்குவரத்துக்கோ பொது மக்களுக்கோ எவ்விதமான இடை யூறும் ஏற்படாது என்று வாதிட்டார். பின்னர் இந்த வழக்கு மீண்டும் மாலை 4.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, போராட்டம் நடத்த அனுமதி கோரிய மனு காவல்துறையால் நிராகரிக்கப்பட்டுவிட்டதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் இந்த மனுவுடன் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கிறோம் என்றார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 10-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.