

பங்கஜகஸ்தூரி நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ஜிங்கிவிர்-எச்’ என்ற ஆயுர்வேத மாத்திரையை கரோனா (கோவிட்-19) நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் பயன்படுத்தி சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பங்கஜ கஸ்தூரி ஹெர்பல்ஸ் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஜே.ஹரீந்திரன் நாயர் வெளியிட்டுள்ள செய்தி:
கேரளாவை சேர்ந்த பிரபல ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு நிறுவனமான பங்கஜகஸ்தூரி ஹெர்பல் ஆராய்ச்சி அறக்கட்டளை, ‘ஜிங்கிவிர்-எச்’ (ZingiVir-H) என்ற ஆயுர்வேத மாத்திரையை தயாரித்துள்ளது. நுரையீரல் தொற்றுகள், வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் இது நன்கு செயல்பட்டுள்ளது. அதேபோல, சுவாச சின்சைஷியல் வைரஸ், இன்புளூயன்சா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையிலும் இது சிறப்பாக செயலாற்றும் என்று கருதப்படுகிறது.
திருவனந்தபுரம் ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் மனித செல்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுக்கூடப் பரிசோதனையிலும் இது எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை. இதையடுத்து, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆய்வக சோதனைகள் பதிவகம் இந்த மாத்திரையைக் கொண்டு மருத்துவப் பரிசோதனைகள் நடத்த ஒப்புதலும், அனுமதியும் வழங்கியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டு, மாத்திரையின் தரம், செயலாற்றும் திறன் உறுதிசெய்யப்பட உள்ளது.
முதல்கட்ட சோதனை முடிவுகள் மே 2-வது வாரத்துக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலக சமுதாயத்துக்கு ஆயுர்வேத மருத்துவத்தின் சிறந்த பங்களிப்பாக பங்கஜகஸ்தூரியின் ‘ஜிங்கிவிர்-எச்’ மாத்திரை விளங்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.