

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து வி.கே.சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லிஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
அதையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி வி.கே.சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘அதிமுக-வில் பொதுச்செயலாளர் என்ற பதவியை நீக்குவதற்கு யாருக்கும் எந்த அடிப்படை அதிகாரமும் கிடையாது. இதை தேர்தல் ஆணையமும், டெல்லி உயர் நீதிமன்றமும் கருத்தில் கொள்ளாமல் இரட்டை இலை சின்னத்தை கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அளித்தது சட்டவிரோதமானது’’ என கூறப்பட்டிருந்தது.
சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘இதுதொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறையேதும் காண முடியவில்லை’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குறை நிவர்த்தி மனு விரைவில்தாக்கல் செய்யப்படும் என சசிகலாதரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.