Published : 02 May 2020 07:41 AM
Last Updated : 02 May 2020 07:41 AM

சம்பள பிரச்சினையால் வழக்குகள் அபாயம்; தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்: தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

ஊரடங்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சம்பள பிரச்சினையால் வழக்குகள் தொடுக்கும் அபாயம் இருப்பதால் தொழில் நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.காந்த் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது அவசியம்தான். ஆனால், ஊரடங்கு காரணமாக தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு உற்பத்தியும் வர்த்தகமும் நின்றுவிட்டன.

ஏப்ரல் மாத சம்பளம்

கடும் நிதிச்சுமை இருந்தபோதிலும், மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, எங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தொழில்நிறுவனத்தினர் தங்கள் தொழிலாளர்களுக்கு மார்ச் மாத சம்பளத்தை வழங்கிவிட்டனர்.

தொழிற்சாலைகள் முற்றிலும் செயல்படாததால் தொழில்நிறுவனத்தினர் ஏப்ரல் மாத சம்பளத்தை கொடுக்க இயலாதநிலையில் உள்ளனர்.

உற்பத்தியின்மை, வருவாய் இழப்பு போன்றவற்றால், ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்கினால் அதுதொழிற்சாலைகளை கடுமையாகப் பாதிக்கும். தொழிலாளர்கள் வேலை இழப்பதற்கும் வழிவகுக்கும்.

தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றால் அவர்கள் தொழில்நிறுவனத்தினர் மீது குற்ற வழக்குகள் தொடரக்கூடும். இயலாமையால்தான் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலை ஏற்படும். அதற்காக தொழிற்சாலைகளை மூடினால் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். வழக்குகள் பிரச்சினையால் தொழிற்சாலை மேலும் பாதிக்கப்படும்.

எனவே, தற்போது உருவாகியுள்ள எதிர்பாரா சூழலை சமாளிக்க அரசு உதவ வேண்டும். சம்பள பிரச்சினைக்கு இணக்கமான தீர்வுகாணும் வகையில் கலந்தாலோசனை செய்ய அரசு முன்வந்தால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவோம். எங்களின் நியாயத்தை உணர்ந்து தமிழக அரசு உரிய உத்தரவையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் உடனே வெளியிடும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x