Last Updated : 02 May, 2020 07:24 AM

 

Published : 02 May 2020 07:24 AM
Last Updated : 02 May 2020 07:24 AM

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய ஆபத்துகள்

உலகில் ஒட்டுமொத்த மக்களையும் வீட்டுக்குள் தள்ளியிருக்கிறது, கரோனா வைரஸ். சீனாவில் இது பரவிய போது நுரையீரலைத் தாக்கும் தொற்றாகவே பார்க்கப்பட்டது. இருமல், தும்மல், சளியோடு மூச்சுத் திணறல் பிரதான பிரச்சினையாகப் பேசப்பட்டது. பாதிக்கப்பட்டவர் உடலில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவதையும் அதை சமாளிக்க வென்டிலேட்டர்கள் நிறைய தேவைப்படுவதையும் மருத்துவர்கள் முன்வைத்தனர். இப்போதோ ‘ரத்தக் கட்டிகள்’ (Blood clots), பக்கவாதம், சிவந்த சருமத் திட்டுகள் சேர்ந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

அண்மையில், அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பலருக்கும் சிறுநீரகப் பாதிப்பு இருந்திருக்கிறது. அதனால் ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேசமயம் இவர்களுக்கு டயாலிசிஸ் மேற்கொண்ட போது ரத்தத்தைச் சுத்தம் செய்யும் செல்லுலோஸ் குழாய்கள் அடிக்கடி அடைத்துக் கொண்டன. சிறுநீரை வெளியேற்றும் குழாய்களிலும் அடைப்பு இருந்தது. அதற்குக் காரணம், அந்தக் குழாய்களில் வழக்கத்துக்கு மாறாக ரத்தக் கட்டிகள் உருவாகி இருந்ததுதான். தொடர்ந்து இவர்களைக் கண்காணித்த போது சிறுநீரகம், இதயம், மூளை, நுரையீரல், குடல், கால், சருமம் ஆகிய இடங்களிலும் இம்மாதிரியான ரத்தக் கட்டிகள்காணப்பட்டன. இவர்களில் பலர் சிகிச்சைபலன் தராமல் இறந்து போயினர்.

ரத்தம் உறைவது ஏன், எப்படி?

நம் ரத்தக் குழாய்களில் ஒரு ரத்த நதி ஓடுகிறது. இது ஓய்வில்லாமலும் தடங்கல் இல்லாமலும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அதேசமயம் அதுஉடம்பைவிட்டு வெளியில் வந்து வீணாகிவிடவும் கூடாது. உதாரணமாக, கைவிரலில் காயம் பட்டால் ரத்தம் கொட்டுகிறது. உடனே கட்டுப் போடுகிறோம். ரத்தம் உறைந்து பிரச்சினை தீர்ந்து விடுகிறது. காயம் பட்ட இடத்தில் ரத்தம் உறைவது அவசியம்தான். அதற்காக, உடலுக்குள் ஓடும் ரத்த நதி உறைவது ஆபத்தான விஷயம். உள்ளுறுப்புகள் செயல் இழப்பதில் தொடங்கி உயிரிழப்பு வரை அபாயங்கள் நேரும். கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதுதான் நடக்கிறது. எப்படி?

இவர்களுக்கு ரத்தக் குழாய்கள் இரண்டு விதமாகப் பாதிக்கப்படுகின்றன. முதலாவது, உடலில் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தின் அதீத செயல்பாட்டால் ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ உருவாகிறது. அப்போது நோய்ப் பாதுகாப்பு தர வேண்டிய சைட்டோகைன் புரதங்கள் ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்பதைப் போல் நடந்து கொள்வதால், கிருமிகளை அழிப்பதோடு, போகிற போக்கில் ரத்தக் குழாய்களையும் ‘பதம்’ பார்த்து விடுகின்றன.

அடுத்தது, கரோனா வைரஸின் நேரடித் தாக்குதல். இந்த வைரஸ்கள்சுவாசப் பாதையில் மேல் அடுக்கு செல்கள் (Epithelial cells) வழியாக உடலுக்குள் புகுந்து நோயை உருவாக்குகின்றன என்பது ஆரம்பக்கட்ட தகவல். புதிய தகவல் என்னவென்றால், இவை உள்ளடுக்கு (Endothelial cells) செல்களையும் துளைத்துக் கொண்டு உடலுக்குள் செல்லும் என்பதுதான். அதிலும் குறிப்பாக, ரத்தக் குழாய் உள்ளடுக்கு செல்களை கரோனா வைரஸ்கள் தாக்கும் போது அங்கே அழற்சி / வீக்கம் (Endotheliitis) உண்டாகிறது. போகப் போக விரிசலும் விழுகிறது.

உடலில் எந்த இடத்திலாவது ரத்தக் குழாயில் விரிசல் விழுந்தால் ரத்தத்தில் உள்ள தட்டணுவுக்குத் (Platelet) தகவல் போகும். பிளம்பர் வந்து ‘எம்-சீலை’ப் பூசி, விரிசலை அடைத்து தண்ணீர்க் கசிவை நிறுத்துவது போல் தட்டணுவும் ‘ஃபைப்ரின்’ (Fibrin) பசையால் ஒரு வலையைப் பின்னி, ரத்தக் குழாய் விரிசலை அடைத்துவிடும். இந்த அற்புதம் உடலின் வெளிப்பக்க ரத்தக் கசிவுக்கு நடந்தால் நல்லது; உள்பக்கத்தில் நடந்தால் அது ஆபத்து.

எப்படியென்றால், விரிசலில் விரிக்கப்பட்டிருக்கும் ஃபைப்ரின் வலையில் தட்டணுக்கள், கொழுப்பு செல்கள் எல்லாமேகும்பலாகச் சிக்கிக் கொண்டு ‘ரத்தப் பந்து’ ஆகிவிடும். தேனடையில் தேனீக்கள் அடைவது என்பார்களே அதுபோல்தான் இது. இந்தச் செயல்பாட்டை ‘உள்கட்ட ரத்த உறைவு’ (Intrinsic blood clotting) என்கிறோம். இப்படி உருவான ரத்தப் பந்துக்குப் பெயர் ‘ரத்த உறைவுக் கட்டி’ (Thrombus). இது ரத்த நதிக்கு வேண்டாத சங்கதி. இது இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். அல்லது ரத்த நதியில் உருண்டோடி (Embolus) வேறு இடத்தில் ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். எந்த இடத்தில் ரத்தத்தைத் தடுக்கிறதோ அந்த இடத்தைப் பொறுத்து ஆபத்து அமையும்.

நுரையீரலில் என்ன பாதிப்பு?

கரோனா பாதித்த நுரையீரல் ரத்தக் குழாய்களில் முதல்கட்ட வீக்கம் உண்டாகும் போது, அவற்றால் சரியாகச் சுருங்கவும் முடியாது; விரியவும் முடியாது. அதனால் ரத்த ஓட்டம் ஒழுங்காக நடக்காது. காற்றுப் பைகளில் ஆக்ஸிஜன் -கார்பன்-டை-ஆக்ஸைடு பறிமாற்றம் போதுமான அளவுக்கு இருக்காது. இதன்விளைவாகத்தான் கரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இது நுரையீரலுக்கு விழும் முதல் அடி.

அடுத்து, காற்றுப் பைகளுக்கான ரத்தக் குழாய்கள் மீன் வலைபோல் பின்னப்பட்டிருக்கும். மிக நுண்ணிய வலைப் பின்னலில் ரத்தம் உறைவது எளிது. அப்போதெல்லாம் காற்றுப் பைகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துவிடும். ஆக்ஸிஜனுக்கு அங்கே வழியில்லாமல் போகும். மேலும், ரத்தப் பந்தானது நுரையீரலின் பிரதான ரத்தக் குழாயை அடைத்து விடுவதால் (Pulmonary embolism) மொத்த ரத்த ஓட்டமும் ‘லாக் டவுன்’ ஆகிவிடும். இதனால் திடீர் மரணம் ஏற்படும்.

அடுத்ததாக ஒரு புதிய செய்தி… உடலில் திடீரென்று திட்டுத் திட்டாக சிவந்த தடிப்புகள் தோன்றுகிறது என்றால், அது ‘அலர்ஜி’ என நினைத்து அரிப்பு மாத்திரையைத் தேடாதீர்கள். அது கரோனாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். சருமத்தில் ரத்தம் கட்டுவதால் ஏற்படும் நிலைமை இது.

மாரடைப்பும் பக்கவாதமும்

கரோனா பாதிப்பால் உண்டாகும் ரத்தக் கட்டியானது இதயத்தில் கரோனரி ரத்தக் குழாய்களில் ஏற்படுமானால், அது மாரடைப்பு. அதுபோன்றே மூளை ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு ஏற்படுகிறது என்றால், அது பக்கவாதம் (Stroke). வழக்கமாக, ரத்தக்கொதிப்பு, இதயநோய், நீரிழிவு, கொலஸ்டிரால் கூடுதல் எனத் துணை நோய் ஏதாவது இருந்தால், அவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவது கண்கூடு. ஆனால், நியூயார்க்கில் பக்கவாதமும் மாரடைப்பும் வந்து இறந்த போன கரோனா நோயாளிகள் பலருக்கும் வயது30-ல் இருந்து 40-க்குள்தான். இவர்களுக்கு மற்ற துணை நோய்களும் இல்லை. இவர்களின் இறப்பு முழுக்கமுழுக்க ரத்தக் கட்டிகளால் ஏற்பட்டவையே.

சிகிச்சையில் என்ன பிரச்சினை?

மருத்துவ நடைமுறையில் இம்மாதிரியான ரத்தக் கட்டிகளைக் கரைப்பதற்கு ஹெப்பாரின், tPA போன்ற மருந்துகளைச்செலுத்துவதுண்டு. என்ன சிக்கல் என்றால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநேக இடங்களில் ரத்தக் கட்டிகள் இருப்பதால் மருந்தின் அளவை பல மடங்கு கூட்ட வேண்டியிருக்கிறது. அப்போது அதன் எதிர்விளைவாக மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உயிராபத்தை அதிகப்படுத்திவிடுகிறது.

இந்த புதிய ஆபத்தைத் தவிர்க்கவும்வழி இருக்கிறது. உங்களுக்கு ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற துணை நோய்கள் இருந்தால் சரியாக சிகிச்சை பெறுங்கள். புகைப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். புகையிலையில் உள்ள நச்சுக்கள் பளிங்கு போல் இருக்க வேண்டிய ரத்தக் குழாய்களைஉப்புப் பாளங்களாக்கி சீக்கிரத்தில் விரிசல் விழ வைக்கும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு துரித உணவுகளை ஓரங்கட்டுங்கள். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள். நோய்எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நடைப்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் ரத்தக் குழாய்களைப் பலப்படுத்தும். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். கரோனாவுக்கான வாய்ப்பு குறையும். அடிக்கடி கை கழுவுங்கள். கரோனா புறமுதுகிட்டு ஓடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x