

ஊரடங்கு உத்தரவால் சுபநிகழ்ச்சிகள், ஓட்டல்கள் இல்லாததால் வாழை இலைகள் பறிக்காமல் மரத்திலேயே விடப்பட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், சிவகங்கை, சாக்கோட்டை, தேவகோட்டை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில் 10 மாதங்களுக்கு முன்பு வாழை பயிரிடப்பட்டு வாழைத்தார்களும், இலைகளும் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் மார்ச் 25-ம் தேதி கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் ஒரு மாதமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. மேலும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. இதனால் வாழை இலைகளை விற்க முடியவில்லை.
அதேபோல் வாழைத்தார்களுக்கும் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து ரூ.300-க்கும் மேல் விற்கப்பட்ட நாடு ரகம், தற்போது ரூ.50-க்கும் குறைவாகவே விற்கப்படுகிறது. இதையடுத்து அவற்றை பறிக்காமல் அப்படியே மரத்திலேயே விவசாயிகள் விட்டுவிட்டனர்.
இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து இடையமேலூரைச் சேர்ந்த விவசாயி பாண்டி கூறியதாவது: ஒரு ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்தேன். வாழைத்தார், இலைகளை விற்பனை செய்தால் ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
ஊரடங்கால் வாழைத்தார்கள், இலை வாங்க ஆளில்லை. கூலி ஆட்களை வைத்து பறித்து சென்றாலும் கூலிக் கூட விலை கிடைக்கவில்லை. இதனால் அப்படியே மரத்திலேயே விட்டுவிட்டோம்.
இதனால் கடனை செலுத்த முடியாமல் சிரமப்படுகிறோம். வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும், என்று கூறினார்.