

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த ஒரு பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் (வயது 55). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த ஏப்.19 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் டி.பி.சத்திரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வேலங்காடு கல்லறையில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, அன்னை சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், மருத்துவர் உடலை புதைக்க வந்தவர்களை கல், கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கி, ஆம்புலன்ஸ் வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 14 பேர் மீது அண்ணா நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்ட 14 பேர் மீதும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.