

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கரோனா வைரஸின் தாக்கத்தால் சிவப்பு மண்டலமாக இருந்த நிலையில் தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. கரோனா தாக்கம் புதிதாக யாருக்கும் இல்லாததால் இந்நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை எடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் இந்த எண்ணிக்கை 63 ஆக அதிகரித்திருந்தது. இதில் 54 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளவர்களுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 7 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 22 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்தனர். இதில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். எஞ்சிய 26 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 18-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. தொடர்ந்து கடந்த 12 நாட்களாக இம் மாவட்டத்தில் யாருக்கும் புதியதாக தொற்று இல்லை.
இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 15 நாட்களாக புதியதாக யாருக்கும் நோய் தொற்று கண்டறியப்படவில்லை. இம்மாவட்டத்தில் 16 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களில் 10 பேர் குணமாகி இதுவரை வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் இருவர் தென்காசி அரசு மருத்துவமனையிலும், எஞ்சியவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 5 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இம்மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
இதனால் தென் மாவட்டங்களில் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு 4 மாவட்டங்களையும் மாற்றி மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கை , உயிரிழப்பு , புதிய தொற்றுநோய் பரவாமல் இருத்தல் உள்ளிட்ட காரணிகளை கொண்டு தென் மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.