

வடசென்னையில் கரோனா தொற்று ஏன் அதிகமாக உள்ளது என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (மே 1) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"வட சென்னையில் கரோனா தொற்று பாதிப்புகள் அதிகம் உள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்குக் கடைகளுக்குச் செல்லும்போது தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக இருக்கிறது. தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் இங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு மண்டலத்திலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் அதிகமாக தொற்று இருக்கிறது என்பதை ஆராய்ந்து அங்கு புதிய உத்திகளைக் கையாள இருக்கிறோம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.
அப்பகுதிகளில் ஆங்காங்கே கை கழுவுவதற்கான 'வாஷ் பேசின்' ஏற்படுத்தியுள்ளோம். தூய்மைப் பணியாளர்கள், விடுகளில் நோய்த் தொற்று குறித்து கணக்கெடுப்பவர்களுக்கு பிபிஇ கிட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். கபசுர குடிநீரும் இந்த பகுதிகளில் வழங்கப்படுகின்றது. மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அடிப்படையான பாதுகாப்புகளைக் கடைபிடித்து அரசின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.
தென்சென்னையில் 4-5 தடை செய்யப்பட்ட பகுதிகளை விடுவிக்க இருக்கிறோம். பாதிப்பு அதிகம் உடைய 3 மண்டலங்களுக்குக் கூடுதல் கிருமி நாசினி வாகனங்களை அளித்துள்ளோம்.
சுகாதாரப் பணியாளர்களை 'அவுட் சோர்சிங்' முறையில் பணியமர்த்துகிறோம். கூடுதல் பணிகளுக்காக லேப் டெக்னீஷியன்களையும் பணியமர்த்தவுள்ளோம்.
சென்னையில் நேற்று மட்டும் 2,000 பேருக்குப் பரிசோதனை செய்துள்ளோம். அறிகுறிகள், தொடர்பில் உள்ளவர்களை பரிசோதிக்கிறோம். தொடர்பில் இல்லாதவர்களை ரேண்டமாக பரிசோதிப்பதில் அர்த்தமில்லை"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.