கரோனா பாதிப்பு இல்லாத நகரமாக மாறியது தூத்துக்குடி: கடைசியாக சிகிச்சை பெற்றுவந்த பெண் வீடு திரும்பினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோய் தொடர்பாக 3731 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 27 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 27 பேரில் 25 பேர் திரும்பினர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எஞ்சிய ஒருநபர் கரோனா பாதிப்புடன் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, ஆணையாளர் ஜெயசீலன் கலந்துகொண்டு பழக்கூடை கொடுத்து வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்து வீட்டுக்கு திரும்புவதன் மூலம் தூத்துக்குடி சிகப்பு மண்டலத்திருந்து, ஆரஞ்சு மண்டலாமாக மாறியுள்ளது.
இதற்குப் பின்னரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பச்சை மண்டலாமாக மாறுவதற்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இம்மாவட்டத்தில் கோரனா நோய் தாக்கம் இருந்தநேரத்தில் எதிர்த்து பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி.
வெளி மாவட்டங்களில் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருபவர்கள் முறையான அனுமதி பெற்று வரவேண்டும் அவர்களுக்கு மத்திய,மாநில அரசின் சுகாதரத்துறை அறிவுறுத்தலின்படி சோதனை நடத்தப்படும்.
முறையான அனுமதி பெறாமல் வெளி மாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து யாரவது வந்தால், அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஏனெனில் இது மக்கள் பிரச்சனை என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்" என்றார்.
