Published : 01 May 2020 11:49 AM
Last Updated : 01 May 2020 11:49 AM

முத்ரா கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: நகை தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை

முத்ரா கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், சிஎஸ்ஆர் ஆண்டுக்கான தொகையை முன்கூட்டியே தற்போது வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என, நகை தொழிலாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்க நகைகளின் மீது இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் தங்கத்துக்கான மதிப்பு உயர்ந்துகொண்டே உள்ளது. இதை சற்றுத் தாமதமாக உணர்ந்து கிளைகளை அதிக அளவில் திறந்து விளம்பரங்கள் மூலம் மக்களை தங்களின் பக்கம் ஈர்த்தனர். இதனால் உள்ளுர் கடைகளைவிட, விளம்பரங்கள் மூலம் அறிந்த கடைகளை பொதுமக்கள் நாடினர்.

அந்நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் நகைகளை உள்ளுர் பொற்கொல்லர்களால் தயாரித்துத் தர முடியவில்லை. மேற்கு வங்காளத்திலிருந்து இளைஞர்களை வரவழைத்து நகைகளை விரைவில் வேலை பகுப்பு முறையில் உடனுக்குடன் செய்து தர உள்ளுரில் செல்வாக்குள்ள நபர்கள் உதவியுடன் குறைந்த கூலிக்கு தங்களுக்குத் தேவைப்படும் அளவில் நகைகளுக்கு ஆர்டர் கொடுத்தனர் .

இந்தியாவில் சிறு நகைகளான மூக்குத்திகள், ஜிமிக்கிகள், குழந்தைகளுக்கான மோதிரங்கள் உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டம் 5-ம் இடத்திலும், தமிழகத்தில் நகை உற்பத்தியில் கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்திலும் உள்ளது. குறிப்பாக, சிறு நகை வர்த்தகத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த விற்பனை தேவையை விழுப்புரம் பூர்த்தி செய்து வருகிறது.

இது குறித்து மூக்குத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள பொற்கொல்லர்கள் கூறியதாவது:

"1980-ம் ஆண்டு வரை நெக்லஸ், தங்க சங்கிலி போன்றவற்றை கடைக்காரர்கள் கொடுக்கும் தங்கத்தைக் கொண்டு சிதம்பரம் பத்தர், தண்டபாணி பத்தர் போன்றவர்கள் செய்து கொடுத்து வந்தனர். பின்னர் பொற்கொல்லர்களே தங்கத்தை மூலதனமாகக் கொண்டு நகைகளை செய்து தர வேண்டுமென கடைக்காரர்கள் சொன்னதால் தங்களிடம் சேதாரமாகக் கிடைத்தத் தங்கத்தைக் கொண்டு மூக்குத்தி, குழந்தைகள் மோதிரம் செய்யத் தொடங்கினர். அவரிடம் வேலை செய்த தொழிலாளர்கள் தனியே வந்து மூக்குத்தி, குழந்தைகள் மோதிரம் என செய்யத் தொடங்கினர்.

தற்போது இத்தொழிலில் நேரடியாக 10 ஆயிரம் பொற்கொல்லர்களும், மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 100 கிராம் தங்கத்தில் சுமார் 300 முதல் 350 மூக்குத்திகள் செய்ய முடியும். இதில் ஒரு மூக்குத்திக்குக் கூலியாக ரூ.12 ரூபாயும், 10 சதவீத சேதாரமும் நிர்ணயிக்கப்பட்டது.

வேலை போட்டியில் பிற்காலத்தில் கூலி முழுவதுமாக நிறுத்தப்பட்டு தற்போது பொற்கொல்லர்களின் சொந்த தங்கத்திற்கு 6 சதவீத சேதாரமும், கடைக்காரர்கள் கொடுக்கும் தங்கத்திற்கு 4.5 சதவீத சேதாரமும் கொடுக்கப்படுகிறது. இதனால் பொற்கொல்லர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராட வேண்டியுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் இங்கு நகை செய்யும் 10 ஆயிரம் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மேலும், இந்த தொழிலை சார்ந்துள்ள மிஷின் கட்டிங், மெருகேற்றக்கூடிய பட்டறை, கம்பி தகடு உருவாக்கும் பட்டறைகளும் பூட்டிக்கிடப்பதால் அந்த கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு கைவினைஞர்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் சி.உமாபதி தெரிவித்ததாவது:

"நகைத் தொழில் மற்ற தொழில்கள் போல் அல்லாமல் கரோனாலிருந்து மீண்ட பிறகும் பொதுமக்கள் நகை கடைகளுக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் ஆகும். ஏற்கெனவே கையிருப்பில் உள்ள நகைகள் விற்பனை செய்வதற்கு மேலும் மூன்று மாதத்திற்கு மேல் ஆகும்.

அதன் பிறகு தேவைக்கு ஏற்ப நகைக்கடைகள் நகை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க குறைந்தபட்சம் மூன்று மாதங்களில் ஆகும். ஆக ஓராண்டு காலம் நகை தொழிலாளர்களுக்கு மிகச் சிரமமான காலமாக இருக்கும்.

ஆகவே, தமிழக அரசு பொற்கொல்லர் நல வாரியம், சிறு, குறு தொழில் மையத்தில் பதிவு பெற்ற பொற்கொல்லர்கள், குடிசைத்தொழில் பதிவு அட்டை உள்ளிட்ட எந்த விதமான பதிவு பெற்றிருந்தாலும் பொற்கொல்லர்களுக்கு பதிவு விடுபட்டு விட்டது, வயதைத் தாண்டிவிட்டது, புதுப்பிக்கவில்லை போன்ற காரணங்களால் கூறி நிராகரிக்காமல் அத்தனை பேரின் குடும்பத்திற்கும் மாதம் ரூ.4 ஆயிரம் நிவாரண தொகையை அரசு விரைவாக வழங்க வேண்டும்.

மேலும், கார்ப்பரேட் நகைக்கடைகள் மூலம் வழங்கப்படும் சிஎஸ்ஆர் ஆண்டுக்கான தொகையை முன்கூட்டியே தற்போது வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும். மேலும், கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்ட முத்ரா கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்"

இவ்வாறு அவர் கூறினார்.

.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x