

ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் போதைக்கு அடிமையானவர்களால் மதுபானங்கள் திருடப்படுவதைத் தடுக்க தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் மதுபானங்களை அழிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தின் சொத்து பாதுகாப்பு அறையில் வழக்கு ஒன்றில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட மதுபானங்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களின் சொத்து பாதுகாப்பு அறைகளில் உள்ள மதுபானங்களை அழிப்பது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த கடிதத்தை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் தாமாக முன்வந்து விசாரித்து இன்று பிறப்பித்த உத்தரவு:
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே தமிழகத்தின் அனைத்து குற்றவியல் நீதிமன்றங்களிலும் சொத்து பாதுகாப்பு அறைகளில் உள்ள மதுபானங்களை விசாரணை அதிகாரி முன்னிலையில் அழிக்க வேண்டும்.
வழக்கிற்கு தேவைப்பட்டால் குறைந்தளவு மதுபானம் எடுத்து வைத்துக்கொள்ளலாம். மதுபானம் அழிப்பு தொடர்பான நீதிபதி/ நீதித்துறை நடுவர் சான்றழித்த பஞ்சநாமா, புகைப்படம் மற்றும் வீடியோவை விசாரணையின் போது சாட்சியமாக நீதிபதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.