Published : 01 May 2020 10:57 AM
Last Updated : 01 May 2020 10:57 AM

மெகுல் சோக்சி உள்ளிட்டோரின் கடன் தள்ளுபடி விவகாரம்: நிதியமைச்சரின் விளக்கம் மக்கள் காதில் பூ சுற்றும் வேலை- முத்தரசன் விமர்சனம்

கணக்கியல் கடன் தள்ளுபடி மக்கள் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் துரோகம் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 1) வெளியிட்ட அறிக்கையில், "தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளிகளான மெகுல் சோக்சி, விஜய் மல்லையா, யோகி ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் உள்ளிட்ட 50 பேர் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியுள்ள கடன் தொகையில் ரூபாய் 68 ஆயிரத்து 607 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் மத்திய நிதியமைச்சரின் விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியான தகவல்படி கடன்கள் கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்கும் நடவடிக்கை கை விடப்படவில்லை என்று விளக்கியுள்ளார். இது நாட்டு மக்கள் 'காதில் பூ சுற்றும்' வேலை என்பதை நன்கு அறிவார்கள்.

கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் இதுவரை எவ்வளவு, யார் யார் அல்லது எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மத்திய பாஜக அரசு வசூலித்து இருக்கிறது என்பதை நிதியமைச்சர் வெளியிடுவாரா? அவருக்கு ஆதரவாக பேசும் மத்திய அமைச்சர் ஜவடேகர் அதற்கான ஏற்பாடுகள் செய்வாரா?

அரசு அதிகாரத்தில் நிதி மூலதன சக்திகளின் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், நவ தாராளமயக் கொள்கைகளின் விளைவு மக்கள் சொத்துக்களை கொள்ளை போகச் செய்வதாகவே அமையும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் நலன் சார்ந்த பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்து எடுத்துக் கூறி வருகின்றனர்.

நாட்டு மக்கள் கோவிட்-19 வைரஸ் நோய் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முனைப்பாக ஈடுபட்டிருக்கும் போது, சாகுபடி செய்த விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் கடன் சுமை கழுத்தை முறிக்கிறது, ஒரே ஒரு முறை கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து உதவுங்கள் என விவசாயிகள் கதறி அழுது வரும் போது, கடன் வாங்கி படித்து முடித்து, வேலை தேடி அலையும் போது, கடன் வசூல் என்ற பெயரில் இளைய தலைமுறை அவமதித்துத் தற்கொலை சாவுக்கு நெட்டித் தள்ளி வரும் போது, தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருப்பது, பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். மன்னிக்கக் கூடாத துரோகமாகும்.

ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் மத்திய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை மாற்றுவதன் மூலம் தான் சமூக சொத்துக்களை பாதுகாக்க முடியும். இதற்கான முறையில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள், மக்கள் நலன் பேணும் சக்திகள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x